பாஜக வேட்பாளருக்கு கை சின்னத்தில் ஓட்டு போடுங்க இது எப்படி இருக்கு?

மத்திய பிரதேச மாநில இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஜோதிராதித்ய சிந்தியா கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது இந்த வீடியோ சமூக இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜோதிராதித்ய சிந்தியாவை தெரியாதவர்கள் யாரும் அரசியலில் இருக்க முடியாது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை ஆண்ட மன்னர் பரம்பரையான சிந்தியா குடும்பத்தை சேர்ந்த இவர், முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகன் ஆவார். தந்தையை போலவே அரசியலில் முன்னேற்ற பாதையில் சென்ற இவர், 2002 முதல் 2019 வரை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா தொகுதி லோக்சபா எம்பியாக இருந்தார். கடந்த வருடம் நடந்த தேர்தலில் இவர் தோல்வி அடைந்தார் .2012 முதல் 2014 வரை 2 வருடங்கள் மன்மோகன் சிங் அமைச்சரவையில் எரிசக்தி துறை இணை அமைச்சராகவும் இருந்தார். சமீபத்தில் இவர் பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் இவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். சிந்தியாவுடன் அவரது ஆதரவாளர்கள் 22 பேர் பாஜகவில் இணைந்தனர்.

பின்னர் இவர்கள் மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து இந்த தொகுதிகள் உள்பட 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 3ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இங்குள்ள தாப்ரா என்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் சிந்தியா பேசினார். அப்போது, கை சின்னம் உள்ள பட்டனை அமர்த்தி காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று சிந்தியா கூறினார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தான் தனக்கு தவறு என்பதை அவர் உணர்ந்தார். உடனடியாக அதை திருத்தி தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று அவர் பேசினார். சிந்தியாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினாலும் சிந்தியாவுக்கு இப்போதும் காங்கிரஸ் மீது இருக்கும் பாசம் குறையவில்லை என்று சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களும் பரவிவருகிறது.

You'r reading பாஜக வேட்பாளருக்கு கை சின்னத்தில் ஓட்டு போடுங்க இது எப்படி இருக்கு? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சர்ச்சை ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு நெல்லை, குமரி மாவட்ட காற்றாலை நிறுவனங்களில் பினாமி பெயரில் முதலீடு.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்