பீகார் மக்களிடம் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கிறதா? பிரதமருக்கு தேஜஸ்வி கேள்வி..

பீகார் மக்களிடம் கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் ஞாபகமிருக்கிறதா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி, பிரதமருக்குத் தேஜஸ்வி கடிதம் எழுதியிருக்கிறார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. 2வது கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. ராம்விலாஸ் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மெகா கூட்டணியை உருவாக்கிப் போட்டியிடுகின்றன.மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்கிறார்.

இதையொட்டி, மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி பிரதமருக்கு ஒரு திறந்த கடிதத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் கடந்த தேர்தலில் என்ன வாக்குறுதி அளித்தீர்கள்? பீகாருக்கு ஒன்றே கால் லட்சம் கோடி சிறப்பு நிதி தருவதாகக் கூறினீர்களே.. பீகார் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்காமல், ஒரு சட்டத்தையே எத்தனை நாள் காரணம் காட்டுவீர்கள்? அரசியல் சட்டத்தையே திருத்திய உங்களால், பீகார் மாநிலத்திற்காக ஒரு சட்டத்தைத் திருத்த முடியாதா? பாட்னா பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக அறிவிக்காதது ஏன்? பீகார் மாநிலத்தை மத்திய அரசு இரண்டாம் தர மாநிலமாகக் கருதுவது ஏன்? கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது? வெளிநாட்டு இந்தியர்களுக்கு சிறப்பு விமானங்களை இயக்கிய உங்களால், பீகார் தொழிலாளர்களுக்கு ஏன் இயக்க முடியவில்லை?

இவ்வாறு தேஜஸ்வி பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

You'r reading பீகார் மக்களிடம் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கிறதா? பிரதமருக்கு தேஜஸ்வி கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நயன்தாரா படத்தில் நம்பமுடியாத கிளைமாக்ஸ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்