ஐஏஎஸ் அதிகாரிக்கு ஸ்வப்னா கொடுத்த பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் தற்போது அமலாக்கத் துறையின் காவலில் உள்ள கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு சர்ச்சை நாயகி ஸ்வப்னா ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் விலை உயர்ந்த பரிசுகளை கொடுத்து குஷிப்படுத்தி உள்ளார். இந்த வருடம் பிறந்த நாளுக்கு அவர் 1 லட்சம் மதிப்புள்ள ஐபோனை பரிசாக கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா மீது தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத்துறை ஆகிய மூன்று மத்திய விசாரணை அமைப்புகளும் வழக்கு பதிவு செய்துள்ளன. இது போதாதென்று கேரள போலீசாரும் இவர் மீது ஒரு மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சுங்க இலாகா இவர் மீது காபிபோசா சட்டத்தின் கீழும், தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இத்தனை கடுமையான வழக்குகள் உள்ளதால் சமீப காலத்தில் ஸ்வப்னாவால் சிறையை விட்டு வெளி வர முடியாத நிலை உள்ளது. தற்போது இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்வப்னாவுக்கும், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் மிக நெருங்கிய பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. இருவரும் பிறந்த நாளின் போது விலை உயர்ந்த பரிசுகளை பரஸ்பரம் பரிமாறி வந்துள்ளனர். இருவருமே விசாரணையில் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த 3 வருடங்களாக தனக்கு ஸ்வப்னா பிறந்த நாளின் போது விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி வந்ததாக சிவசங்கர் மத்திய அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார். கடந்த இரு வருடங்களுக்கு முன் பிறந்த நாளின் போது இரண்டு விலையுயர்ந்த வாட்சுகளையும், கடந்த வருடம் லேப்டாப்பும் ஸ்வப்னா பரிசாக வழங்கியதாக சிவசங்கர் கூறியுள்ளார்.

இந்த வருடம் ஜனவரியில் பிறந்தநாள் கொண்டாடிய போது ஸ்வப்னா தனக்கு 1 லட்சம் மதிப்புள்ள ஐபோனை தந்ததாக சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஸ்வப்னா மற்றும் அவரது குடும்பத்தினரின் பிறந்தநாளுக்கு சிவசங்கரும் ஏராளமான விலை மதிப்புள்ள பரிசுகளை வழங்கியுள்ளார். ஸ்வப்னா தனக்கு தந்த பரிசுகளுக்கு நன்றிக் கடனாக கேரள அரசின் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்த ரகசிய ஆவணங்களை அவருக்கு சிவசங்கர் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

You'r reading ஐஏஎஸ் அதிகாரிக்கு ஸ்வப்னா கொடுத்த பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காஞ்சிபுரம் கோவிலில் வெறும் பல்லக்காண வெள்ளி பல்லக்கு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்