கொல்கத்தாவில் காளி பூஜையில் கலந்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல்

கொல்கத்தாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த காளி பூஜையில் கலந்துகொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு சமூக இணையதளத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில் காளி பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நவராத்திரி காலத்தில் 9 நாட்களும் மாநிலம் முழுவதும் நடைபெறும் காளி பூஜைகளில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். குறிப்பாகக் கொல்கத்தாவில் காளி பூஜை மிகவும் பிரமாண்டமாக நடத்தப்படும்.

இந்நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் கொல்கத்தாவில் நடந்த காளி பூஜையில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12ம் தேதி கொல்கத்தாவில் உள்ள காகுரகாச்சி என்ற இடத்தில் நடந்த காளி பூஜையில் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்டார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து ஷாகிப் அல் ஹசனுக்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பலர் கண்டனம் தெரிவித்தனர்.

ஒரு இளைஞர் பேஸ்புக் நேரலையில் தோன்றி ஷாக்கிப்பை கண்டதுண்டமாக வெட்டிக் கொல்வேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து ஷாகிப் அல் ஹசன் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பது: நான் என்னுடைய சொந்த மதத்தை மோசமாக்க வேண்டும் என்பதற்காகக் காளி பூஜையில் கலந்து கொள்ளவில்லை. இஸ்லாம் மதம் அமைதியை மட்டுமே போதிக்கிறது என நான் நம்புகிறேன். இஸ்லாம் மதத்தில் உள்ள எல்லா கொள்கைகளையும் பின்பற்ற நான் எப்போதும் முயற்சிப்பது உண்டு. கொல்கத்தா என்னுடைய சொந்த வீடு போன்றதாகும். அங்குச் செல்ல வேண்டிய வாய்ப்பு கிடைத்தால் அதை நான் எப்போதும் தவற விடுவதில்லை.

பல்வேறு மதத்தைச் சேர்ந்த ஆட்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் முயற்சிக்க வேண்டும். நான் காளி பூஜையில் கலந்து கொண்டது முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த யாருடையாவது மனதைப் புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். இதற்கிடையே ஷாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பங்களாதேஷில் உள்ள சிலெட் என்ற பகுதியைச் சேர்ந்த மொஹ்சின் தலுக்தர் என்பவர் தான் ஷாகிபுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

You'r reading கொல்கத்தாவில் காளி பூஜையில் கலந்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாக்காளர் பட்டியல் 4 நாட்கள் சிறப்பு முகாம் தமிழக தேர்தல் ஆணையர் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்