வருமானம் குறைந்தது சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை

சபரிமலையில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டதால் வருமானம் பெருமளவு குறைந்ததை தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக மண்டல சீசனில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

இதன்மூலம் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும், கேரள அரசுக்கும் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து வந்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு பக்தர்கள் மூலம் நேரடியாகவே மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்தில் மட்டும் ₹ 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்து வந்தது.

ஆனால் இவ்வருடம் நிலைமை தலைகீழாகி விட்டது. கொரோனா பரவல் காரணமாகப் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் இதைவிடக் குறைவாகவே பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர்.இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் தேவசம் போர்டு ஊழியர்களுக்குச் சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் அனுமதிக்கப் படாததால் தேவசம் போர்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. மண்டல காலம் தொடங்கிவிட்டால் நிலைமை சீராகி விடும் என தேவசம்போர்டு அதிகாரிகள் கருதி இருந்தனர்.

ஆனால் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டதால் நிதி நிலைமை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதையடுத்து தினசரி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்த தேவசம்போர்டு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாகக் கேரள அரசுக்குக் கோரிக்கை விடுக்கவும் தீர்மானித்துள்ளது. ஆனால் கேரள சுகாதாரத் துறை இதற்கு சம்மதித்தால் மட்டுமே பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மருத்துவ பரிசோதனை வசதிகளையும் அதிகரிக்க வேண்டும்.

ஏற்கனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை நடத்துவதற்காகச் சபரிமலையில் 500க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரித்தால் சுகாதாரத் துறை ஊழியர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். எனவே சுகாதாரத் துறையின் முடிவை பொறுத்தே பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

You'r reading வருமானம் குறைந்தது சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழுக்கு வரும் தாஜ்மகால் நடிகையின் சகோதரி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்