ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்படை பயிற்சி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்படை கல்வி மற்றும் பயிற்சி மையம் ஆகும். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள ஏழிமலை என்ற இடத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய பயிற்சி மையம் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய இந்த பயிற்சி மையம் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த மையம் 2,452 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 1,200 மாணவர்கள் பட்டப் படிப்பை படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பயிற்சி மையத்திற்கு நேற்று தபாலில் ஒரு கடிதம் வந்தது. 'சிக் திபெத்தியன்ஸ் அண்ட் ஜஸ்டிஸ்' என்ற இயக்கத்தின் பெயரில் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் இன்னும் ஒரு சில தினங்களில் கடற்படை பயிற்சி மையத்தை வெடி குண்டு வைத்து தகர்ப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து பயிற்சி மைய அதிகாரிகள் உடனடியாக ராணுவ உளவுத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ராணுவ உளவுத்துறை அந்த கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுகுறித்து அந்த பயிற்சி மையம் சார்பில் பையனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது மத்திய பாதுகாப்பு துறை தொடர்பான விவகாரம் என்பதால் இது தொடர்பாக நீதிமன்றத்திடம் அனுமதி பெற்ற பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். நாளை பையனூர் போலீசார் இது குறித்து நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஏழிமலை கடற்படை பயிற்சி மையத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

You'r reading ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்படை பயிற்சி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹாரர் திரைப்படத்தில் கால் பதிக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்