முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஸ்வப்னாவின் ஆடியோவால் பரபரப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஆக்குவதாக மத்திய அமலாக்கத் துறையினர் தன்னிடம் கூறியதாகத் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பேசும் ஆடியோ வெளியானது கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பெரும்பாலானோருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. ஸ்வப்னா சுரேஷ் மற்றும் இவரது கூட்டாளிகளான சரித்குமார், சந்தீப் நாயர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் ஆகியோரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. சிவசங்கர் எர்ணாகுளம் சிறையிலும், ஸ்வப்னா சுரேஷ் திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிவசங்கர் தவிரக் கேரள முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் சில முக்கிய அதிகாரிகளும் விரைவில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகக் கூறி முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் தற்போது மருத்துவமனையில் உள்ளார்.இந்நிலையில் ஒரு மலையாள இணையதளத்தில் ஸ்வப்னா சுரேஷின் ஒரு ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பது: தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் எதிராக நான் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் என்னைக் கட்டாயப்படுத்துகின்றனர்.

அவ்வாறு முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் இந்த வழக்கில் என்னை அப்ரூவர் ஆக்குவதாகவும் அவர்கள் கூறினர். மேலும் நான் ஏற்கெனவே கொடுத்த வாக்குமூலத்தை எனக்குப் படித்துப் பார்ப்பதற்கும் அவர்கள் தரவில்லை. நான் கூறாத பல விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளதாக எனது வக்கீல் கூறினார். கேரள அரசின் பல்வேறு நலத் திட்டங்களில் உதவி பெறுவதற்காக முதல்வர் பினராயி விஜயன் துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றார். அதற்கு முன்னதாக கேரளாவுக்கு உதவுவதாக கூறிய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சிவசங்கர் துபாய் சென்றிருந்தார்.

அவருடன் நானும் சென்றேன். அப்போது அந்த நிறுவனங்களுடன் முதல்வருக்காக கமிஷன் பணத்தை வாங்கியதாக வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமலாக்கத் துறையினர் கூறினர். ஆனால் நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனாலும் சிறைக்கு வந்து என்னிடம் வாக்குமூலம் பெற அவர்கள் முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு ஸ்வப்னா தனது ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோ வெளியானது கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து தான் இந்த ஆடியோ வெளியாகி இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. எனவே இதுகுறித்து விசாரிக்கக் கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் உத்தரவிட்டுள்ளார்.

You'r reading முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஸ்வப்னாவின் ஆடியோவால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கலவரம் நடந்த இடத்தில் நடிகர் தொழுகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்