சபரிமலை செல்லும் பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பும் வரை தீவிர கண்காணிப்பு... போலீசார் நடவடிக்கை

சபரிமலைக்குத் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் அவர்கள் தரிசனம் முடிந்து திரும்புகிறார்களா என்பதைக் கண்காணிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்காகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஒவ்வொரு பக்தரையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டலக் கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வருடம் வரை மண்டல சீசனில் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் தரிசனத்திற்குப் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கொரோனா பரவல் காரணமாகத் தினமும் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆன்லைனில் முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். செல்லும் போது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் கையில் இருக்க வேண்டும். தரிசனத்திற்கு முன்பு பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையும் நடத்தப்படுகிறது. இந்த காரணங்களால் சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு காணாத அளவில் வெறிச்சோடிக் காணப்படுகிறது.வழக்கமாக மண்டலக் காலங்களில் அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டால் நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் தான் நடை சாத்தப்படும். பகலில் அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே நடை சாத்தப்பட்டிருக்கும்.

ஆனால் தற்போது பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டு விட்டதால் தரிசன நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணிக்கு மட்டுமே நடை திறக்கப்படுகிறது. பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டால் மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் இரவில் 9 மணிக்கு நடை சாத்தப்படும். பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் அதிகாலை 3 மணி முதல் தான் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானத்திற்குத் தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதேபோல் இரவு 7 மணி வரை மட்டுமே பம்பையில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் சன்னிதானத்தில் இருந்து திரும்பி விட வேண்டும். இதனால் தினமும் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்புகிறார்களா என்பதைக் கண்காணிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். பம்பையில் இருந்து சன்னிதானம் வரை முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பக்தர்கள் வருவதையும், செல்வதையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். யாராவது நீண்டநேரம் தங்கி இருப்பது தெரிந்தால் உடனடியாக அவர்களைக் கண்டுபிடித்து போலீசார் அனுப்பி வைத்து வருகின்றனர்.

You'r reading சபரிமலை செல்லும் பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பும் வரை தீவிர கண்காணிப்பு... போலீசார் நடவடிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காமெடி நடிகை வீட்டில் போதை மருந்து அதிகாரிகள் சோதனை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்