வயதுக்கு வந்த ஒரு பெண் அவர் விரும்பும் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் லவ் ஜிகாத் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வயதுக்கு வந்த ஒரு பெண் அவர் விரும்பும் யாருடன், எங்கு வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட சில மாநிலங்கள் லவ் ஜிகாத்துக்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவர தீர்மானித்துள்ளது. இந்நிலையில் வயதுக்கு வந்த ஒரு பெண் அவர் விரும்பும் யாருடன், எங்கு வேண்டுமென்றாலும் சேர்ந்து வாழலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. டெல்லியை சேர்ந்தவர் சுலேகா (20). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென மாயமானார். இதையடுத்து அவரது உறவினர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், வயதுக்கு வராத மைனரான சுலோகாவை அப்பகுதியை சேர்ந்த பப்லு என்பவர் கடத்திச் சென்று விட்டார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து தொடர்ந்து சுலேகாவை கண்டுபிடிக்க போலீசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பப்லுவின் வீட்டில் சுலேகா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம் நீதிபதி விசாரித்தபோது, தான் பப்லுவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும், அவருடன் தான் வாழப் போவதாகவும் கூறினார். பின்னர் நீதிபதி கூறுகையில், சுலேகா மைனர் என்று அவரது பெற்றோர் கூறினர். ஆனால் விசாரித்ததில் அவருக்கு 20 வயது ஆனது தெரியவந்துள்ளது. வயதுக்கு வந்த ஒரு பெண் தனக்கு விருப்பமான யாருடன், எங்கு வேண்டுமென்றாலும் சேர்ந்து வாழலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. எந்தக் காரணம் கொண்டும் அந்த தம்பதியினரை பெற்றோர் மிரட்டக் கூடாது. போலீசார் பாதுகாப்புடன் சுலேகாவை அவரது கணவர் வீட்டில் கொண்டு விட வேண்டும். எந்த நேரத்திலும் உதவி கேட்டால் போலீசார் அவருக்கு உதவ வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

You'r reading வயதுக்கு வந்த ஒரு பெண் அவர் விரும்பும் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிறை அல்ல.. சொகுசு வீட்டில் அரசின் பாதுகாப்போடு இருக்கும் மும்பை தாக்குதல் தீவிரவாதிகள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்