உள்ளாட்சி தேர்தலில் காங். வேட்பாளருக்கு ஆதரவாக முன்னணி நடிகை பிரச்சாரம்... செல்பி எடுக்க போட்டா போட்டி...

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரபல மலையாள நடிகை அனுஸ்ரீ பிரச்சாரம் செய்தார். அப்போது அவருடன் செல்பி எடுக்கப் பலரும் முண்டியடித்தனர்.கேரளாவில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.

இந்த மாவட்டங்களில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சென்னீர்க்கரை பஞ்சாயத்தில் 12வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளராக ரினோய் வர்கீஸ் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பிரபல மலையாள முன்னணி நடிகை அனுஸ்ரீ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. நடிகை அனுஸ்ரீயுடன் செல்பி எடுக்க அனைவரும் முண்டியடித்தனர். தன்னுடன் செல்பி எடுக்க விரும்பியவர்கள் அனைவருக்கும் அனுஸ்ரீ முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

நடிகை அனுஸ்ரீ பாஜக ஆதரவாளர் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. பாஜக சார்பில் நடத்தப்பட்ட கோகுலாஷ்டமி விழாவில் அவர் கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் பாஜக ஆதரவாளர் எனப் பலரும் கூறி வந்தனர். பாஜக நடத்திய விழாவில் கலந்துகொண்ட அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ரினோய் வர்கீஸ் என்னுடைய நீண்டகால நண்பர். அவருக்காக நான் பிரசாரத்தில் ஈடுபட்டதில் தவறு ஒன்றும் இல்லை. என்னுடைய விருப்பத்தின் படியே நான் பிரசாரம் செய்தேன்.

அவர் வெற்றி பெற்றால் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து காரியங்களையும் செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார். கடந்த 2012ல் பகத் பாசிலுடன் டைமன்ட் நெக்லஸ் என்ற படத்தில் அறிமுகமான இவர் ரெட் வைன், மை லைஃப் பார்ட்னர், இதிகாசா, ஒப்பம், ஆதி உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

You'r reading உள்ளாட்சி தேர்தலில் காங். வேட்பாளருக்கு ஆதரவாக முன்னணி நடிகை பிரச்சாரம்... செல்பி எடுக்க போட்டா போட்டி... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விவசாயிகளின் நம்பிக்கையை தேர்தல் முடிவு காட்டுகிறது.. பிரதமர் மோடி பெருமிதம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்