உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தாயை ஏமாற்றி ₹2.5 கோடி மோசடி.. மனைவியுடன் ஒருவர் கைது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவின் தாயை ஏமாற்றி ₹2.5 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவரிடம் பணிபுரிந்து வந்த ஒருவரையும், அவரது மனைவியையும் நாக்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் எஸ்.ஏ. போப்டே. இவரது தாய் முத்தா போப்டே. இவருக்கு சொந்தமாக நாக்பூர் ஆகாஷ்வாணி சதுக்கம் அருகே சீடன் லான் என்ற பெயரில் ஒரு பண்ணை நிலம் உள்ளது. இந்த பண்ணை நிலம் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடப்பட்டு வந்தது. இதன் மேற்பார்வையாளராக அப்பகுதியைச் சேர்ந்த தபஸ் கோஷ் (49) என்பவரை முக்தா போப்டே நியமித்து இருந்தார்.

அவருக்கு சம்பளமும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கமிஷனும் கொடுக்கப்பட்டு வந்தது. 2007ம் ஆண்டு முதல் தபஸ் கோஷ் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருமணம் உட்பட நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை ஒழுங்காக முக்தா போப்டேவுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை குறைத்துக் காண்பித்து இவர் மோசடி செய்து வந்துள்ளார். ஆனால் இந்த விவரம் முக்தா போப்டேவுக்கு தெரியாது. தபஸ் கோஷ் சொல்வதை அவர் நம்பி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்தவர்கள் தபஸ் கோஷிடம் பணத்தை திரும்பக் கேட்டனர்.

ஆனால் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் முக்தா போப்டேவிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் விசாரித்தபோது தான் தபஸ் கோஷின் மோசடி விவரம் தெரியவந்தது. இதுகுறித்து அவர் நாக்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இதுவரை ₹ 2.5 கோடி தபஸ் கோஷ் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும், மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தாயிடமே கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தாயை ஏமாற்றி ₹2.5 கோடி மோசடி.. மனைவியுடன் ஒருவர் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகைகளிடம் கேட்கக் கூடாத கேள்வி.. காலம் மாறிபோச்சு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்