இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் மகாராஷ்டிராவில் நாளைமுதல் இரவு நேர ஊரடங்கு அமல்

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக லண்டன் மற்றும் வடக்கு இங்கிலாந்து பகுதிகளில் தான் இதன் தாக்கம் மிக அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் சில பகுதிகள் உட்பட பல இடங்களில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகள் துண்டித்துள்ளன. வரும் 31ம் தேதி வரை இங்கிலாந்துக்கான விமானங்களை இந்தியா ரத்து செய்துள்ளது. சவுதி அரேபியா, கடல், வான் மற்றும் தரை வழி எல்லை அனைத்தையும் மூடி விட்டது. இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவுவதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நிபந்தனைகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை (22ம் தேதி) முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த சமயத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர வெளியே செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக 14 நாள் சுய தனிமையில் இருக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

You'r reading இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் மகாராஷ்டிராவில் நாளைமுதல் இரவு நேர ஊரடங்கு அமல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் ஒரு விந்தை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்