புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எப்படி உதவும் என விவாதிக்க தயாரா? மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் சவால்

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எந்த வகையில் உதவும் என விவாதிக்கத் தயாரா என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக் கோரி டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த போராட்டத்தின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கிடையே இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் விவசாயிகளிடையே அவர் பேசியது: புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு பயனுள்ளதாக அமையும் என்று கூற முடிகின்ற ஒரு பாஜக தலைவரை கூட இதுவரை என்னால் பார்க்க முடியவில்லை. கடந்த 32 நாட்களாக விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தெருவில் போராடி வருகின்றனர். இதுவரை 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து விட்டனர்.

இந்த விவரம் மத்திய அரசுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எந்த வகையில் பலனளிக்கும் என்பது குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க மத்திய அரசுக்கு நான் சவால் விடுகிறேன். இந்த சட்டங்கள் குறித்து யாருக்கு நன்றாக தெரியும் என்று அப்போது புரிந்து கொள்ளலாம். எனவே விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசு உடனடியாக புதிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

You'r reading புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எப்படி உதவும் என விவாதிக்க தயாரா? மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் சவால் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை : பொன். ராதாகிருஷ்ணன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்