வேளாண் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் இன்று தீர்மானம்... பாஜக எம்எல்ஏவின் எதிர்ப்புடன் நிறைவேறியது...

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவின் எதிர்ப்புடன் தீர்மானம் நிறைவேறியது.மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இதுவரை நடத்திய அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. வேளாண் சட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று மத்திய அரசும், வாபஸ் பெறும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினரும் கூறி வருகின்றனர். இதனால் போராட்டம் முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 மாநிலச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளாவும் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்தது. இதற்காகக் கடந்த 23ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த கவர்னரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் கவர்னர் ஆரிப் முகமது கான் சட்டசபையைக் கூட்ட அனுமதி மறுத்தார். கேரள அமைச்சரவை கூடி எடுத்த இந்த முடிவுக்கு கவர்னர் அனுமதி மறுத்தது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனாலும் 31ம் தேதி (இன்று) மீண்டும் கூட்டத்தை நடத்தக் கேரள அரசு தீர்மானித்தது. இந்தக் கூட்டத்திற்கும் கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி அளிக்க மாட்டார் எனத் தகவல் வெளியானது. இதையடுத்து கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் சுனில் குமார், பாலன் ஆகியோர் கவர்னர் ஆரிப் முகம்மது கானை நேரில் சந்தித்து அனுமதி கோரினர். இதையடுத்து சிறப்புக் கூட்டம் நடத்த கவர்னர் அனுமதி அளித்தார். இதன்படி இன்று காலை சிறப்புச் சட்டசபை கூடியது. மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், புதிய வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது ஆகும்.

இது கேரளாவைக் கடுமையாகப் பாதிக்கும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கூறினார். இந்த தீர்மானத்திற்குக் கேரள சட்டசபையில் உள்ள ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவான ராஜகோபால் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார். தொடர்ந்து மற்ற கட்சித் தலைவர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர். இறுதியில் பாஜக எம்எல்ஏவின் எதிர்ப்புடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது.

You'r reading வேளாண் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் இன்று தீர்மானம்... பாஜக எம்எல்ஏவின் எதிர்ப்புடன் நிறைவேறியது... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்