இந்தியாவில் வேகமாக பரவுகிறது... மேலும் 7 பேருக்கு உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு...!

உருமாறிய கொரோனா இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இன்று மேலும் 7 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே இந்த நோய் அங்கு வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே பரவியுள்ள கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகத்தில் இந்த வைரஸ் பரவுகிறது. மற்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, சவுதி அரேபியா உள்படப் பல நாடுகள் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியா ஜனவரி 7ம் தேதி வரை விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளது. ஆனாலும் குறுகிய நாட்களில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உட்பட நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கிவிட்டது. இதற்கிடையே இந்தியாவிலும் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே டெல்லி, அமிர்தசரஸ், சென்னை உள்பட நகரங்களுக்கு இங்கிலாந்திலிருந்து வந்த 20க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு இந்த புதிய வகை வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மேலும் 7 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்ட டிசம்பர் 23 வரை சுமார் 33 ஆயிரம் பயணிகள் இங்கிலாந்திலிருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஆர் டி பிசிஆர் பரிசோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You'r reading இந்தியாவில் வேகமாக பரவுகிறது... மேலும் 7 பேருக்கு உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பலாத்கார வழக்கில் ஜாமீனில் வெளிவந்த 10 நாளில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்