பழைய வாகனங்களுக்கு புதிய வரி... மத்திய அரசு தீவிர ஆலோசனை

பழைய வாகனங்களுக்குக் கூடுதல் வரி விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன்படி 8 வருடம் ஆன வாகனங்களுக்குப் பசுமை வரி விதிக்கப்படும். மாநில அரசுகளுடன் ஆலோசித்து விரைவில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிப்பதால் காற்று மாசுபாடு பெருமளவு உயர்ந்து வருகிறது. குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்பட நகரங்களில் காற்று மாசுபாடு மிக அதிகமாக உள்ளது.

இதையடுத்து பழைய வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது. மிகப் பழமையான வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்குவதற்குப் பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி 8 வருடம் ஆன வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கப்படும். சாலை வரியின் 10 முதல் 25 சதவீதம் வரை புதிய வரிவிதிப்பு இருக்கும். தகுதிச் சான்றிதழை புதுப்பிக்கும் நேரத்தில் அந்த வாகனம் 8 வருடத்திற்கு மேல் ஆனதாக இருந்தால் உடனடியாக வரி வைக்கப்படும்.

அதிக அளவில் காற்று மாசுபாடு உள்ள இடங்களில் மறு பதிவு செய்யும் வாகனங்களுக்குச் சாலை வரியில் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.பயன்படுத்தும் எரிபொருள் மற்றும் வாகனத்தின் அடிப்படையில் வரிவிதிப்பில் வித்தியாசம் இருக்கும். எரிவாயு, எத்தனால் பயன்படுத்தும் வானங்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும் வரிவிதிப்பில் இருந்து சலுகை அளிக்கப்படும். பஸ்களுக்கு குறைந்த பசுமை வரி விதிக்கப்படும். இது தொடர்பான தீர்மானத்திற்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்த பின்னர் அடுத்த வருடம் ஏப்ரல் முதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

You'r reading பழைய வாகனங்களுக்கு புதிய வரி... மத்திய அரசு தீவிர ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மணிரத்னம் படத்துக்கு முன் மற்றொரு ஷூட்டிங்கை முடித்த த்ரிஷா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்