`வாயைத் திறங்கள்..!- மோடிக்கு யஷ்வந்த் சின்ஹாவின் திறந்த மடல்

பாஜக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்தநிலை கடிதத்தை எழுதியுள்ளார்.

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. பாஜக-வைச் சேர்ந்தவரான இவர் கடந்த சில மாதங்களாக, தனது கட்சி பற்றியே பல விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு மனம் திறந்த கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜக ஆட்சி பொறுப்பில் இருந்து எப்படி பல்வேறு துறைகளில் தோல்வி கண்டது என்றும் அது குறித்து பிரதமர் வாய் திறக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அவரது கடிதத்தில், `பாஜக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியப் போகின்றன. இந்த காலக்கட்டத்தில் தன் கையிலிருக்கும் அனைத்து யுக்திகளையும் இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. ஆனால், ஓட்டு போடும் சாதாரண மக்களின் நம்பிக்கையை இந்த நடவடிக்கையால் வென்றெடுக்க முடியவில்லை.

விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கின்றனர், இளைஞர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர், சிறு தொழில்கள் சிதைந்து கிடக்கின்றன, சேமிப்புகள் கரைந்துவிட்டன, இது எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ஊழல் மலிந்துவிட்டது. இவை எதையும் சரி செய்ய முடியாமல் அரசு தவித்துக் கொண்டிருக்கிறது.

இது எல்லாம் நம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பேராபத்தை விளைவித்திருக்கிறது. சில சின்ன சின்ன வெற்றிகள் இந்த நான்கு ஆண்டு ஆட்சியில் கிடைத்துள்ளதுதான். ஆனால், நாம் கண்ட மிகப் பெரிய தோல்விகளுக்கு முன்னால் அதுவெல்லாம் ஒன்றுமே இல்லை. எனவே, தைரியமாக பேசுங்கள்.

ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள். இதைச் செய்ய தவறினீர்கள் என்றால், எதிர்காலம் உங்களை மன்னிக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார். சின்ஹாவின் இந்த கடிதம் பாஜக வட்டாரத்திலும் தேசிய அரசியலிலுல் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்து பாஜக சார்பில் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading `வாயைத் திறங்கள்..!- மோடிக்கு யஷ்வந்த் சின்ஹாவின் திறந்த மடல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `இந்திய ரயில்வே துறையின் பாதுகாப்பு உயர்ந்துவிட்டது’- பெருமிதம் பேசும் அமைச்சர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்