விவசாயிகள் போராட்டம்.. பிரதமருக்கு சுப்பிரமணியசாமி சொல்லும் ஆலோசனை..

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சுப்பிரமணியசாமி பிரதமர் மோடிக்கு ஆலோசனை கூறியுள்ளார். அதில் 3 பரிந்துரைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று கூறி, அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் 71வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுடன் 11 முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்தது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 44 வழக்குகள் போடப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியசாமி, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:விவசாயிகளின் போராட்டம் 70 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது. அரசுக்கும், விவசாயிகளுக்கும் சுமுகமான உடன்பாடு எட்டுவதற்கு ஒரு ஆலோசனை கூறுகிறேன். வேளாண் சட்டங்களை விருப்பப்படும் மாநிலங்களில் மட்டும் அமல்படுத்த அனுமதிக்கலாம். அமல்படுத்த விரும்பாத மாநிலங்களில் அதன் பலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போகட்டும்.

வேளாண் சட்டங்களில் 3 விதிகளை வகுக்க வேண்டும். விருப்பப்படும் மாநிலங்களில் இந்த சட்டங்களை அமல்படுத்தலாம். எல்லா மாநிலத்திலும் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படும். வேளாண் வர்த்தகத்தில் ஈடுபடும் கம்பெனிகளைத் தவிர மற்ற துறைகளில் உள்ள கம்பெனிகளுக்கு வேளாண் சட்டங்களின் கீழ் ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. இந்த 3 விதிகளை வகுத்தால், அதை விவசாயிகள் ஏற்றுக் கொள்வார்கள். விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வரும். மத்திய அரசு இதை செய்ய வேண்டும்.இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

You'r reading விவசாயிகள் போராட்டம்.. பிரதமருக்கு சுப்பிரமணியசாமி சொல்லும் ஆலோசனை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை! 06-02-2021

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்