குழந்தையை காப்பாற்ற பிரதமரை நாடிய தம்பதி: ரூ.6 கோடி இறக்குமதி வரியை ரத்து செய்த மத்திய அரசு!

அரிதான மரபணு நோயினால் அவதிப்பட்டு வரும் 5 மாத குழந்தையான டீராவின் உயிர்காக்கும் மருந்தின் மீதான 6 கோடி ரூபாய் இறக்குமதி வரியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.

மகாராஷ்ரா மாநிலம் மும்பை அந்தேரி பகுதியில் வசிக்கும் பிரியங்கா - மிஹிர் தம்பதியர் தங்கள் குழந்தைக்கு கிராவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டி, அந்த நிதியை கொண்டு அமெரிக்காவிலிருந்து 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை ஆர்டர் செய்துள்ளனர். இருப்பினும், 16 கோடிக்கு நிதி திரட்டி மருந்து வாங்கினாலும், அதனை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய மத்திய அரசிற்கு ரூ.6 கோடி ஜி.எஸ்.டி வரியாக செலுத்த வேண்டும்.

எனவே, ரூ.6 கோடி வரியை எப்படியாவது மத்திய அரசிடம் பேசி தள்ளுபடி செய்ய வைக்க வேண்டும் என மகாராஷ்டிரா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உதவியுடன் பிரதமர் மோடியை நாடியுள்ளனர். தங்களால் முடிந்த அளவிற்கு ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரியை மட்டும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடியுடனும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குழந்தை டீராவின் உயிர்காக்கும் மருந்தின் மீதான 6 கோடி ரூபாய் இறக்குமதி வரியை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தையின் மருந்து இறக்குமதி மீதான வரியை தள்ளுபடி செய்தற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பட்னாவிஸ் கடிதம் எழுதியுள்ளார்.

You'r reading குழந்தையை காப்பாற்ற பிரதமரை நாடிய தம்பதி: ரூ.6 கோடி இறக்குமதி வரியை ரத்து செய்த மத்திய அரசு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அயோத்தி ராமர் கோயில் கட்ட இதுவரை ரூ.1,000 நன்கொடை வசூல்.. அறக்கட்டளை தகவல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்