மேற்கு வங்கத்தில் அம்மா உணவகம்.. ரூ.5க்கு முட்டையுடன் சாப்பாடு..

மேற்கு வங்கத்தில் அம்மா உணவகம் திட்டத்தை மம்தா பானர்ஜி தொடங்கி வைத்துள்ளார். ரூ.5க்கு முட்டையுடன் பருப்பு சாப்பாடு தரப்படுகிறது.மேற்கு வங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி ஆட்சியில் உள்ளது. வரும் மே மாதம் இம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், தொடர்ந்து 2 முறை ஆட்சியில் உள்ள ஆளும் திரிணாமுல் கட்சிக்கு எதிராக மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. அம்மாநிலத்தை முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவீனமாகி விட்டன. தற்போது பாஜக 2வது பெரிய கட்சியாக கடும் போட்டியில் உள்ளது. திரிணாமுல் கட்சியில் இருந்து பல தலைவர்களை பாஜக தம் பக்கம் இழுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில், தேர்தலைக் கருத்தில் கொண்டு மம்தா பானர்ஜி பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழகத்தில் உள்ளது போல் அம்மா உணவகம் திட்டத்தை அவர் நேற்று(பிப்.15) கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். இந்த அம்மா உணவகங்களில் ரூ.5க்கு சோறு, பருப்பு, காய்கறி, முட்டை ஆகியவை அளிக்கப்படுகிறது. கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்பட உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். தாய்மார்களின் பெருமையைப் போற்றும் விதத்தில் ஏழைகளுக்காக இந்த அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார். ஏற்கனவே தமிழகத்தைப் போல் கர்நாடகாவில் இந்திரா உணவகம், ஆந்திராவில் அன்னா உணவகம் ஆகியவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading மேற்கு வங்கத்தில் அம்மா உணவகம்.. ரூ.5க்கு முட்டையுடன் சாப்பாடு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை, கோவை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்