பாஜக பெண் தலைவர் கொகைன் போதைப் பொருளுடன் கைது

கொல்கத்தாவில் பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா பெண் தலைவர் பமீலா கோஸ்வாமியை 100 கிராம் கொகைன் போதைப் பொருளுடன் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா மாநில செயலாளராக இருப்பவர் பமீலா கோஸ்வாமி. இந்நிலையில் இவருக்குப் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கொல்கத்தா போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை இவர் தன்னுடைய நண்பர் பிரபிர் குமாருடன் போதைப் பொருள் சப்ளை செய்வதற்காக காரில் செல்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவர் செல்லும் வழியில் காத்திருந்தனர். பின்னர் அவரது காரை வழி மறித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் அவரிடம் 100 கிராம் கொகைன் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதைக் கைப்பற்றிய போலீசார் பமீலா கோஸ்வாமி மற்றும் அவர் நண்பர் பிரபிர் குமாரைக் கைது செய்தனர். போதைப் பொருளுடன் பாஜக பெண் தலைவர் கைது செய்யப்பட்டது மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் பாஜகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க மாநில பாஜக எம்.பி. லாக்கெட் சட்டர்ஜி கூறுகையில், இந்த சம்பவத்தில் போலீசின் பங்கு என்ன என்பது குறித்து சந்தேகமாக உள்ளது. பமீலா தவறு செய்திருந்தால் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு முன்பும் பல பாஜக தொண்டர்களை ஆயுதம் கடத்தியதாகக் கூறி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக கூடுதலாக இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. கூடுதல் விவரங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. பமீலா இளம் வயது உடையவர். அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் சட்டத்தின் படி போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் கூறினார். மேற்கு வங்க மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சமிக் பட்டாச்சாரியா கூறுகையில், காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் என்ன நடந்தது என்பது குறித்து வேறு யாருக்கும் தெரியாது. போலீசார் கண்டெடுத்த போதைப் பொருளை பமீலா கடத்தினாரா, அல்லது இது போலீசாரின் நாடகமா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

You'r reading பாஜக பெண் தலைவர் கொகைன் போதைப் பொருளுடன் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கட்சிக்கு மக்களிடம் மிக மோசமான இமேஜ் முதல்வருக்கு 10ல் 3 மார்க் கூட கொடுக்க முடியாது போட்டுத் தாக்கும் மெட்ரோ மேன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்