உத்தரகண்ட் முதல்வராக இன்னொரு ராவத்.. பாஜக தலைமை நியமித்தது..

உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திரசிங் மீது அதிருப்தி ஏற்பட்டதால், அவரை பாஜக தலைமை நீக்கியது. புதிய முதல்வராக திராத்சிங் ராவத் அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்டில் 2017ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 57ல் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட திரிவேந்திரசிங் ராவத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது நான்காண்டு காலம் முடிந்த நிலையில், திரிவேந்திரசிங் மீது ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டது.

மேலும், பாஜகவின் முன்னோடிகளுக்கும், காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவி வந்தவர்களுக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது. இந்த சூழலில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது. இதையடுத்து, திரிவேந்திரசிங்கை ராஜினாமா செய்யுமாறு பாஜக தலைமை அறிவுறுத்தியது. இதன்படி, அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, திராத்சிங் ராவத் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது பவ்ரி தொகுதி பாஜக எம்பியாக உள்ள அவர், இன்று(மார்ச்10) புதிய முதல்வராக பொறுப்பேற்கிறார். அவர் கூறுகையில், எனக்கு இந்த வாய்ப்பை அளித்த பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி. இது வரை நடைபெற்று வந்த வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வேன் என்றார். திராத்சிங்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading உத்தரகண்ட் முதல்வராக இன்னொரு ராவத்.. பாஜக தலைமை நியமித்தது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக போட்டியிடும் 174 தொகுதிகள் எவை? வேட்பாளர் பட்டியல் எப்போது?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்