அடுத்தவாரத்தில் ஆபத்து இருக்கு! – கொரோனா குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அடுத்த வாரத்தில் உச்சம் அடையலாம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றானது, இந்தியாவில் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மாநிலங்கள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்த போதிலும், கொரோனா தொற்றானது கட்டுக்குள் அடங்காமல், நாளுக்கு நாள் வீரியத்துடன் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வரை கட்டுக்குள் இருந்துவந்த கொரோனா பரவல் பிப்ரவரி மாதத்தின் பாதியில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் தினமும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 9 நாட்களாக தினந்தோறும் 3 லட்சம் என்ற அளவைக் கடந்துவிட்டது. இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி ஒரு நாள் கொரோனா பாதிப்பு இன்று மட்டும் 3.86 லட்சமாக உள்ளது.

இந்த அதிகப்படியான பாதிப்பின் மூலம் நாட்டில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய ஆக்ஸிஜன், மருந்து பொருட்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு உதவியாகவும், கொள்முதல் வகையில் பெற்று வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை குறித்து மத்திய அரசு நியமித்துள்ள நிபுணர் குழு ஒன்றின் தலைவர் வித்யாசாகர் கூறுகையில், “எங்கள் நம்பிக்கை என்னவென்றால், அடுத்த வாரத்திற்குள், நாடு முழுவதும் தினசரி புதிய பாதிப்புகள் உச்சம் அடையலாம்” என்றார்.

கடந்த ஏப்ரல் 2ம் தேதி மத்திய அரசுக்கு இக்குழு அளித்த ஒரு அறிக்கையில், மே 5 முதல் 10ம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடையலாம் என தகவல் அளித்திருந்தனர்.

இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கடந்த ஆண்டு செப்டம்பர் மத்தியில் உச்சம் அடைந்தது அப்போது அதிகபட்சமாக ஒரு நாளில் 97,894 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அதை போல 3 மடங்கு பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 18.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 208,000 பேர் உயிரிழந்தனர். மேலும் மே 15ம் தேதிக்கு பிறகு நாட்டில் கொரோனா பாதிப்பானது மெல்ல மெல்ல குறையும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

You'r reading அடுத்தவாரத்தில் ஆபத்து இருக்கு! – கொரோனா குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளைஞர்களுக்கு வாய்ப்பு இஸ்லாமியர்களுக்கும் பங்கு – ரெடியானது திமுக அமைச்சரவை லிஸ்ட்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்