காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை வளைக்கப் பார்த்த எடியூரப்பாhellip ஆடியோ லீக்!

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இன்று மாலை 4 மணிக்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை வலைக்கப் பார்த்த ஆடியோ லீக் ஆகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது. இதனால், மும்முனை போட்டி நிலவியது. இறுதியில் 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன. அதே நேரத்தில், `நாங்கள் தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது.

பாஜக-வால் நியமிக்கப்பட்ட கவர்னர் பலரும் எதிர்பார்த்தது போலவே எடியூரப்பாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதற்கு அடுத்ததாக எடியூரப்பா தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

104 எம்.எல்.ஏ-க்களை மட்டும் வைத்துக் கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால், பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு அச்சாரமாக அமைந்துள்ளது எடியூரப்பா பேசியுள்ளதாக லீக் ஆகியிருக்கும் ஆடியோ பதிவு.

காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.சி.பாட்டிலிடம் எடியூரப்பா பேசியுள்ளதாக இந்த ஆடியோ பதிவில் கூறப்படுகிறது. ஆடியோவில், `நீ என்னிடம் வா. என்னை வந்து சந்தித்துப் பேசு. உனக்கு நான் அமைச்சர் பதவி தருகிறேன். எங்களிடம் வந்துவிடு. வேறு யாராவது உன் கைவசம் இருந்தால் அவர்களையும் அழைத்து வா’ என்று எடியூரப்பா கூறுவதாக தெரிகிறது.

இன்னும் சில மணி நேரங்களில் எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்த ஆடியோ லீக்கானது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பாஜக, இந்த ஆடியோ பதிவை போலி என்று பறந்தள்ளுகிறது.

ஆனால், மொத்த அரசு இயந்திரத்தையும் தம் வசம் வைத்துள்ள பாஜக, சம்பந்தப்பட்டவர்கள் மீது போலி என்பதற்காக ஒரு வழக்கையும் பதிவு செய்யவில்லை என்பதுதான் விந்தையிலும் விந்தை.

You'r reading காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை வளைக்கப் பார்த்த எடியூரப்பாhellip ஆடியோ லீக்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆஸ்திரேலிய கிரிக்கெட் சர்ச்சை… கரித்துக் கொட்டும் ஷேன் வார்னே!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்