முட்டையை உடைத்த 5 வயது சிறுமி... ஒதுக்கி வைத்த பஞ்சாயத்து

முட்டையை உடைத்த சிறுமியை ஒதுக்கி வைத்த பஞ்சாயத்து

ராஜஸ்தான் மாநிலத்தில் பறவை முட்டையை உடைத்த காரணத்திற்காக சிறுமி வீட்டிற்குள் நுழைய 11 நாள் தடை விதித்த கிராம பஞ்சாயத்திற்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

அறிவியல் மயமாகிவிட்ட இந்த உலகில் இன்னமும் மூடநம்பிக்கைகளுக்கு பஞ்சமில்லை. இதற்கு விதிவிலக்கல்ல ராஜஸ்தான் மாநிலம் பண்டி பகுதியில் உள்ள கோடா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த குஷ்பு என்ற சிறுமி முதன்முதலாக பள்ளிக்கு செல்ல பூஜை நடத்தப்பட்டது.

அப்போது,கூட்டமாக இருந்ததால் தவறி கீழே விழுந்த சிறுமி, புனிதமாக கருதப்படும் பறவையின் முட்டையை எதிர்பாரதவிதமாக உடைத்துவிட்டார். அது மழையை கணிக்கும் பறவையின் முட்டையாக ஊர் மக்களால் நம்பப்படுகிறது. குழந்தை முட்டையை உடைத்தது தெய்வகுத்தம் என்றும், அதனை போக்க பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் ஊர் பஞ்சயாத்து தெரிவித்துள்ளது.

பரிகாரம் முடிந்த பிறகு சிறுமி எட்டு நாட்கள் வீட்டிற்குள் நுழைய பஞ்சாயத்து தடை விதித்தது. பள்ளி முடிந்தவுடன் திண்ணையில் அமர்ந்து தனது பணிகளை செய்யுமாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. உணவு மற்றும் தண்ணீர் அந்த அந்த வேளைக்கு வந்து சேரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது .

மனமுடைந்த அந்த குழந்தையின் தந்தை சாலை மறியலில் ஈடுபட்டார். தவறு செய்த குழந்தைக்காக சாலை மறியலில் ஈடுபட்ட தந்தையை கண்டிக்கும் வகையில், குழந்தையின் 8 நாள் வெளியிருப்பு 11 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. ஊரின் பகையை எதிர்த்து ஒன்று செய்ய முடியாமல் சிறுமியின் குடும்பத்தினர் பரிகாரம் செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தெரியவந்ததை அடுத்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறையினர் கோடா கிராமத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். சிறுமியை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு சமரசம் பேசியுள்ளனர். ஒப்புக்கொள்ள மறுத்த கிராமத்தினர், எங்களின் கலாச்சாரத்தில் அதிகாரிகள் தலையிட வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.

அப்போது குறுக்கிட்ட அதிகாரி, “ஒரு மைனர் குழந்தையின் மீது இவ்வித தண்டனைகளை வழங்கினால், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவீர்கள்” என்று கூறியதும் அவர்கள் உடனே குழந்தையின் தண்டனையை ரத்து செய்தனர்.

கோடா கிராம பஞ்சாயத்தின் இந்த உத்தரவுக்கு, கண்டனம் வலுத்துள்ளது. மனித உரிமை ஆணையம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரியம் கிராமமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

You'r reading முட்டையை உடைத்த 5 வயது சிறுமி... ஒதுக்கி வைத்த பஞ்சாயத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோவை கல்லூரி மாணவி பரிதாப பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்