தீவிர கண்காணிப்பில் குழந்தைகள் காப்பகங்கள்- மத்திய அரசு உத்தரவு

அன்னை தெரேசா மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டியால் பராமரிக்கப்பட்டு வரும் குழந்தை காப்பகங்களில் தீவிர சோதனை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் ஜார்கண்டில் இருக்கும் அன்னை தெரேசா மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டி மையத்தில் குழந்தைகள் விற்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்த சோதனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியின் நிர்மல் ஹிர்டேவில் உள்ள அன்னை தெரேசா மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டி மையத்தில் ஒரு பெண்ணும் ஒரு கன்னியாஸ்திரியும் குழந்தை விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து தான் நாடு முழுவதும் குழந்தை காப்பகங்களில் சோதனை நடத்தச் சொல்லி மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அன்னை தெரேசா மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டி மையங்களில் இந்த சோதனை நடவடிக்கை தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் ஏறக்குறைய 6,300 குழந்தை காப்பக மையங்கள் இருக்கின்றன. அதில் கடந்த டிசம்பர் மாதம் முதல் 2,300 காப்பகங்கள் இந்திய அரசிடம் தங்களை பதிவு செய்துள்ளன. ‘பதிவு செய்யப்படாத 4,000 குழந்தை காப்பகங்களும் இன்னும் ஒரே மாதத்தில் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்’ என்று குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 2.3 லட்சம் குழந்தைகள் இந்த காப்பகங்களில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தீவிர கண்காணிப்பில் குழந்தைகள் காப்பகங்கள்- மத்திய அரசு உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமல் கட்சியில் இருந்து விலகிய தாரைதப்பட்டை வில்லன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்