மாறன் சகோதரர்கள் விசாரணையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்- நீதிமன்றம்

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் குற்ற வழக்கில் மாறன் சகோதரர்கள் கண்டிப்பாக வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் கடந்த மார்ச் மாதம் மாறன் சகோதரர்களை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாறன் சகோதரர்களை விடுவித்தது செல்லாது என்று கூறிய உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் சொல்லியும் உத்தரவிட்டது.

தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை சென்னை, போட் கிளப்பில் இருக்கும் தனது வீட்டில் சட்டத்துக்குப் புறம்பாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இப்படி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்ததால், அரசுக்கு 1.78 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

மேலும், இந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சன் டிவி-யின் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் கடந்த மார்ச் மாதம் சிபிஐ நீதிமன்றம், மாறன் சகோதரர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம், ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வசதியை உங்கள் சகோதரரின் டிவி சேனலுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து நீங்கள் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்’ என்று உத்தரவிட்டுள்ளது.

You'r reading மாறன் சகோதரர்கள் விசாரணையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்- நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது - தூத்துக்குடி ஆட்சியர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்