கனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு

கேரளா கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167-ஆக உயர்ந்துள்ளது. 
கேரளாவில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை, வெள்ளம், மண்சரிவில் சிக்கி இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் மாயமாகியுள்ளர். 41 பேர் காயம் அடைந்தனர். 
 
வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து 1 லட்சத்து 65 ஆயிரத்து 538 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆயிரத்து 155 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு, உடை, அத்தியாவசியப் பொருட்களை கேரளா அரசு வழங்கி வருகிறது. 
 
வெள்ளத்தில் 2 ஆயிரத்து 857 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. 3 ஆயிரத்து 393 ஹெக்டர் விளைநிலங்கள் சேதம் அடைந்தன. அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பேருந்து, ரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்வதால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெள்ளநீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. 
 
தொடர் மழை, வெள்ளப்பெருக்கை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 28ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டிருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. 
 
இந்த நாட்களில் நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து  செய்யப்படுவதாகவும், தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால், உடைமைகளை இழந்த கேரள மாநில மக்கள் அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

You'r reading கனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்