ஐ லவ் முஸ்லிம் என்று வாட்ஸ் ஆப்பில் சாட் செய்த பெண் தற்கொலை!

முஸ்லிம்களை பிடிக்கும் என தெரிவித்த இளம்பெண் ஒருவரை, சங்-பரிவாரக் கூட்டம் அவமானப்படுத்தி, மிரட்டி அவரை தற்கொலை செய்ய வைத்திருப்பது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘முஸ்லிம்களை பிடிக்கும்’ என தெரிவித்த இளம்பெண் ஒருவரை, சங்-பரிவாரக் கூட்டம் அவமானப்படுத்தி, மிரட்டி அவரை தற்கொலை செய்ய வைத்திருப்பது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம், மூடிகெரே என்றபகுதியை சேர்ந்தவர் தன்யாஸ்ரீ (20). இவர் தனது நண்பரான சந்தோஷ் என்பவரிடம் ‘வாட்ஸ்அப்’ சாட்டில் உரையாடியுள்ளார். அப்போது சிக்மகளூர் மாவட்டத்தில், மத வன்முறைகள் அதிகரித்து வருவது பற்றி தனது கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதற்கு, சந்தோஷ், “மத வன்முறைகள் நடப்பது சரிதான் என்றும், இல்லாவிட்டால் ‘லவ் ஜிகாத்’ அதிகமாகிவிடும்” என்றும் கூறியுள்ளார். ஆனால் தன்யாஸ்ரீ இதை ஏற்கவில்லை. மாறாக, எனக்கு முஸ்லிம்களை பிடிக்கும் (I Love Muslim) என்று பதில் அனுப்பியுள்ளார்.

இதை பார்த்த சந்தோஷ், இப்படியெல்லாம் இருக்கக் கூடாது. நீயும் ‘லவ் ஜிகாத்’திற்குள் தள்ளப்படுவாய் என்று கூறியுள்ளார். அத்துடன் நிற்காமல், தன்யாஸ்ரீ உடனான விவரத்தை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து,“இதோ பார்ரா இந்த பொண்ணு, முஸ்லிம்களை லவ் பண்ணுது” என்ற தொனியில் தனது நண்பர்கள் குரூப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். அதேபோல உள்ளூர் பஜ்ரங்தள் நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப்பில் இதை அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, பாஜக இளைஞர் பிரிவு தலைவர் அனில்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல், அண்மையில் தன்யாஸ்ரீ வீட்டுக்கே போய், அவரது தாயின் முன்னிலையிலேயே மோசமாக திட்டியுள்ளனர்.

இனிமேல் இதுபோன்று முஸ்லிம்களுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்று மிரட்டியுள்ளனர். அத்துடன், தன்யாஸ்ரீ படத்தையும், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் படத்தையும், இணைத்து மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் உலவ விட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த தன்யாஸ்ரீ, கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னை மிரட்டியதாலும், போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாலும் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதாகவும் தன்யாஸ்ரீ அந்த கடிதத்தில் கூறியுள்ளார். தனது தற்கொலைக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்யாஸ்ரீ கூறியுள்ளார்.

இதையடுத்து, தன்யாஸ்ரீயை மிரட்டியதாக, பாஜக இளைஞர் அணியை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ள போலீசார், மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர்.

You'r reading ஐ லவ் முஸ்லிம் என்று வாட்ஸ் ஆப்பில் சாட் செய்த பெண் தற்கொலை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மகரவிளக்கு பூஜை முன்னிட்டு சபரிமலையில் குவியும் பக்தர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்