சி.பி.ஐ. இயக்குநராக தொடர அலோக் வர்மாவுக்கு அனுமதி - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

CBI Allow Verma to continue as director Supreme Court verdict

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை நள்ளிரவில் விடுப்பில் செல்ல மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து உச்சநீதிமன்றம் செய்துள்ளது. மீண்டும் சிபிஐ இயக்குநர் பதவியில் அலோக் வர்மா தொடரலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே அதிகார மோதல் வெடித்தது. பகிரங்கமாக ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியதால் சிபிஐ மீதே களங்கம் ஏற்பட்டு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நள்ளிரவில் இருவரையுமே விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு . சிபிஐ.யின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

நள்ளிரவில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்குள்ளானது. தம்மை விடுப்பில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருக்கு ஆதரவாக தன்னார்வ அமைப்பு ஒன்றும் வழக்குத் தொடர்ந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.க வுல், கே.எம்.ஜோசப் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடந்தது.

தொடர்ந்து 45 நாட்கள் விசாரணை நடந்து முடிந்து இன்று நீதிபதிகள் பரபரப்பான தீர்ப்பு வழங்கினர். சிபிஐ என்னும் உயர் அதிகாரம் படைத்த அமைப்பின் தலைவரை நள்ளிரவில் விடுப்பில் செல்ல மத்திய அரசு முடிவெடுத்தது தவறு என்று குறிப்பிட்ட நீதிபதிகள் அந்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பணியில் தொடரலாம் என்றும் உத்தரவு பிறப்பித்ததுடன் கொள்கை முடிவுகள் ஏதும் எடுக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தனர்.

அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழு விசாரணை நடத்தி, அந்தக் குழு எடுக்கும் முடிவுக்குப் பின்னர் அலோக் வர்மா கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிபிஐ இயக்குநருக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இந்தத் தீர்ப்பை வரவேற்றும், மோடி அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

You'r reading சி.பி.ஐ. இயக்குநராக தொடர அலோக் வர்மாவுக்கு அனுமதி - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு - அமைச்சர் தங்கமணி உறுதி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்