ஆர்ச்சரின் அற்புத கேட்ச் நம்பமுடியாமல் சக வீரர்கள்

Super hero Jofra Archer takes one handed stunner to dismiss Ishan kishan

மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் பவுண்டரிக்கு அருகில் வைத்துப் பறந்து சென்று ஒற்றைக் கையால் ஆர்ச்சர் பிடித்த கேட்ச் தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அவர் கேட்ச் பிடித்த போது அதை நம்ப முடியாமல் சக வீரர்கள் தலை மீது கை வைக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் மதிப்பு மிகுந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ₹7.20 கோடிக்கு விலைக்கு வாங்கியது. தன்னுடைய மதிப்பிற்கு ஏற்றவாறு ஆர்ச்சர் நடந்து முடிந்த அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் மட்டுமில்லாமல் பீல்டிங்கிலும் பல அற்புதங்களை அவர் நிகழ்த்தி வருகிறார். பந்து வீச்சாளர்களின் பட்டியலில் தற்போது 17 விக்கெட்டுகளுடன் ரபாடாவுக்கு அடுத்ததாக இவர் 2வது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் நேற்றைய மும்பை அணியுடன் நடந்த போட்டியின் போது ஆர்ச்சர் பிடித்த கேட்ச் குறித்துத் தான் இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். நேற்றைய போட்டியில் பென் ஸ்டோக்சின் அதிரடி சதம் காரணமாக ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த மும்பையைத் தோற்கடித்தது. முதல் இரண்டு போட்டிகளுக்குப் பின்னர் அடுத்து வந்த பல போட்டிகளிலும் மோசமாக ஆடிய சஞ்சு சாம்சனும் நேற்று சிறப்பாக ஆடி அரைசதத்தைக் கடந்தார்.

இந்நிலையில் நேற்று மும்பை இன்னிங்சில் 11ஆவது ஓவரை ராஜஸ்தான் பவுலர் கார்த்திக் தியாகி வீசினார். இவர் வீசிய நாலாவது பந்தை மும்பை வீரர் இஷான் கிஷன் சந்தித்தார். ஆப் சைடுக்கு வெளியில் கார்த்திக் தியாகி வீசிய பந்தை இஷான் கிஷன் சிக்சருக்கு தூக்கினார். தேர்ட் மேன் பகுதியில் பவுண்டரிக்கு அருகே ஆர்ச்சர் அந்த பந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார். பறந்து வந்த பந்தைப் பிடிப்பதற்காக ஆர்ச்சர் சற்று முன்னோக்கி நகர்ந்தார். ஆனால் அந்த பந்து அவரை ஏமாற்றி தலைக்கு மேல் சற்று விலகிப் பறந்து சென்றது. உடனடியாக தரையிலிருந்து குதித்த ஆர்ச்சர் தனது உடலைப் பின்புறமாக வளைத்து வலதுகையால் அந்த கேட்சை பிடித்தார்.

அந்த பந்து கண்டிப்பாக சிக்சருக்கு செல்லும் என்று தான் இஷான் கிஷன் உட்பட மும்பை வீரர்கள் கருதி இருந்தனர். ஆனால் ஆர்ச்சர் துள்ளிக்குதித்து ஒற்றைக் கையால் அந்த கேட்சை பிடித்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அந்த அற்புதக் கேட்சை பார்த்து பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி மற்றும் பீல்டிங்கில் இருந்த சக ராஜஸ்தான் வீரர்கள் ஒரு கணம் திகைத்து நின்றனர். அப்போது இருந்த அவர்களது முகபாவனைகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

You'r reading ஆர்ச்சரின் அற்புத கேட்ச் நம்பமுடியாமல் சக வீரர்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனாவில் தொடங்கி ஜெட் வேகத்தில் முடிந்த படம்.. திரையுலகினர் ஆச்சர்யம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்