தலையின் எடை 27 கிலோ! - ஆபத்தின் அறிகுறியான கழுத்து வலி

Tech Neck, a growing problem among youngsters

மொபைல் என்னும் கைப்பேசி, லேப்டாப் என்னும் மடிக்கணினி, சிஸ்டம் என்னும் கணினி - இன்றைய உலகம் இவற்றைதான் சுற்றிக்கொண்டுள்ளது. பயணத்தின்போது கூட நாம் யாருடனும் பேசுவதில்லை. மொபைல் போனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அலுவலகத்தில் கணினி முன் உட்கார்ந்தால் வேலையில் மூழ்கிப்போகிறோம். முடித்தே ஆக வேண்டிய இலக்குகள் நம் மனதை அழுத்த, கணினித்திரையையே உற்றுப்பார்த்து பணியில் மூழ்கிப்போகிறோம்.

செல்லுமிடங்களுக்கெல்லாம் மடிக்கணினியை தூக்கிக்கொண்டு செல்கிறோம். சிறிது நேரம் கிடைத்தாலும் அதை விரித்துக்கொண்டு உட்கார்ந்து கொள்கிறோம். வேலையை பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டு இருப்பதால், உடல்நலத்தை குறித்த எண்ணமே நமக்குள் எழுவது இல்லை. இப்படி எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் என்னும் மின்னணு சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் கழுத்துப் பகுதி தசைகள் பாதிக்கப்பட்டு 'கழுத்துப் பிடிப்பு' வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆமைக் கழுத்து என்று தமிழ்ப்படுத்தப்படும் 'டர்டைல் நெக்', 'டெக்ஸ்ட் நெக்', 'டெக் நெக்' என்றறியப்படும் பாதிப்புகளுக்கு ஆரம்ப நிலையில் சரியான விதத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் முதுகெலும்பிலுள்ள வட்டுகளுக்கு சேதாரத்தை உண்டு பண்ணி, முதுகெலும்பு பாதிக்கப்பட காரணமாகி விடும்.தோள்பட்டை வலி, கைவிரல்கள் மரத்துப்போதல், தலைவலி ஆகியவை ஆமைக்கழுத்துப் பாதிப்பின் அறிகுறிகளாகும்.

பலர் இவற்றை உதாசீனம் செய்வதால் அல்லது அறியாமையால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால் பாதிப்பு தீவிரமாகிவிடுகிறது.இளைஞர்கள், ஒருநாளுக்கு 110 முதல் 115 முறை, அதாவது ஒருநாளில் மூன்றிலொரு பங்கு நேரம், ஸ்மார்ட் போன் பார்ப்பதில் செலவழிக்கின்றனராம். பெரியவர்களோ, ஒருநாளில் ஐந்து முறை மட்டுமே ஸ்மார்ட் போனை பார்க்கின்றனர். பெரியவர்களில் 60 விழுக்காட்டினர் ஐந்து மணி நேரம் அல்லது அதற்குச் சற்று அதிகமாக கணினியை பார்க்கின்றனர்.

40 விழுக்காடு இளைஞர்களோ நாளொன்றுக்கு ஒன்பது முதல் பதினொரு மணி நேரத்தை கணினியில் செலவிடுகின்றனராம். இவ்வளவு அதிக நேரம் கணினி அல்லது ஸ்மார்ட்போனில் செலவழிப்பது கழுத்தில் பாதிப்பு ஏற்பட காரணமாகிறது.நாம் நிமிர்ந்து நேராக உட்கார்ந்திருக்கும்போது நமது தலையின் எடை 5 கிலோவாக உள்ளது. கணினி அல்லது ஸ்மார்ட்போனை பார்ப்பதற்கு 30 பாகை (டிகிரி) தலையை குனியும்போது அதன் எடை 18 கிலோவுக்கு சமமாகிறதாம்.

வேலையிலோ, சமூக ஊடகங்களிலோ மூழ்கி உன்னிப்பாக கம்ப்யூட்டர் மானிட்டரை அல்லது ஸ்மார்ட்போனை பார்ப்பதற்கு தலையை இன்னும் சற்று குனிந்து 60 பாகை (டிகிரி) சரிக்கும்போது, நம் தலையின் எடை 27 கிலோ அளவு பாரத்திற்கு சமமாகிறது. 5 கிலோவை சுமக்கக்கூடிய நமது கழுத்து, 18 மற்றும் 27 கிலோவை சுமக்கும்போது இயல்பாகவே அது பாதிப்புக்குள்ளாகிறது. 'டெக் நெக்' வகை குறைபாடு ஏற்படுகிறது.நெடுநேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பது முதுகெலும்பு வட்டுக்களின்மேல் இருமடங்கு அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாகிறது.

ஆகவே, நீண்டநேரம் கணினி திரையை (மானிட்டர்) பார்க்காமல் அவ்வப்போது எழுந்து நடந்து வருதல் இவ்வித பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க உதவும். அமர்ந்து வேலை செய்யும்போது, சரியான விதத்தில் உட்கார்ந்து, தலையை அதிகம் சரிக்காமல் நேராக பார்த்து பணியாற்றுவது முக்கியம்.மற்றபடி மொபைலை தேவையில்லாமல் நோண்டிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு பயனுள்ள வகையில் நேரத்தை செலவழிப்பது வேலைக்கு மட்டுமல்ல; உடலுக்கும் நல்லது!

You'r reading தலையின் எடை 27 கிலோ! - ஆபத்தின் அறிகுறியான கழுத்து வலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெள்ளித்திரையில் ஹீரோயினாக கால்பதிக்கும் வாணி போஜன்.. ஹீரோ யார் தெரியுமா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்