குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்வது எப்படி?

Tips to plan trip within your budget

குடும்பமாக சுற்றுலா சென்று வரவேண்டும் என்று எண்ணியும், "ஆசைப்பட்டு தொட்டுவிடுவேன்; காசை கண்டு விட்டுவிடுவேன்," என்ற டி.ராஜேந்தர் பாடலை போல எத்தனை முறை செலவை கணக்கிட்டு மலைத்துப்போய் இருப்பீர்கள்? அதிக பணம் செலவு செய்தால்தான், சுற்றுலா போக முடியும் என்பது உண்மையா? இல்லை! சரியாக திட்டமிட்டால் செலவு கையைக் கடிக்காமல் இன்பமாக சென்று, திருப்தியாக திரும்பி வரலாம். கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனமும், திட்டமிடலுமே இதற்கு அவசியம்.

காலமல்லா காலம்: ஆஃப் சீசன் என்று கூறப்படுகிற காலத்தில் சுற்றுலாதலங்களுக்குச் சென்றால் மிகக் குறைவான செலவில் முடித்துவிடலாம். வழக்கமாக ஒவ்வொரு சுற்றுலாதலங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கிற பருவம் என்று ஒன்று இருக்கும். அதைத் தவிர்த்து மற்ற நாள்களில் அங்கு சென்றால், கூட்டம் இல்லாமல் மனம் திருப்தியாகும் வரைக்கும் இடங்களை கண்ணார கண்டு களிக்கலாம். ஆஃப் சீசனில் சென்றால் பணமும் அதிகம் செலவாகாது.

முன்பதிவு அவசியம்: அடுத்த வாரம் செல்வது என்று திட்டமிட்டு, இந்த வாரம் பதிவு செய்வது ஒருபோதும் செலவு குறைவானதாக இருக்காது. பணத்தை சேமிக்கவேண்டும் என்று கருதினால் முன்பே பதிவு செய்யவேண்டும். சுற்றுலா என்றால் பயணத்திற்கும் தங்குவதற்கும்தான் அதிக செலவாகும். ஆகவே, முன்பே திட்டமிட்டு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தால் தேவையில்லாமல் அதிக பணம் செலவாவதை தவிர்க்கலாம்.

பொது போக்குவரத்து: மிகக்குறைந்த கட்டணத்தில் சென்று வருவதற்கு பொது போக்குவரத்து சேவையே ஏற்றது. பொது வாகனங்களில் பயணம் செய்யும்போது, அப்பகுதி மக்களோடு பழகவும், போகுமிடங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

ஹோட்டல் அல்ல; ஹாஸ்டலே: அநேக சுற்றுலாதலங்களில் குறிப்பாக மலை வாழிடங்களில் இப்போது ஹாஸ்டல்கள் அதிகம் உள்ளன. இவை உயர்தர விடுதிகளைக் காட்டிலும் குறைவான கட்டணத்தில் தங்குவதற்கு இடமளிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஹாஸ்டல்கள் பிரபலமாகி வருகின்றன. அவற்றை பயன்படுத்தினால் குறைவான செலவில் முடிக்கலாம்.

சற்று அனுசரிக்கலாம்: 'திட்டமிடல்' என்று கூறுவதற்காக, திட்டமிட்டதில் அப்படியே வைராக்கியமாக இருக்கவேண்டும் என்பதல்ல. போகவேண்டிய இடத்தில் இறங்கிய பிறகு, அங்குள்ள வழக்கம் மற்றும் அப்போதைக்கு கிடைக்கும் சிறப்புத் தள்ளுபடிகளின்படி சில மாற்றங்களை செய்து கொள்ளலாம். ஆகவே, சற்று தளர்த்திக்கொள்ளும்படியாகவே உங்கள் சுற்றுலா திட்டம் அமையட்டும்.

ஹேப்பி ஜர்னி!

You'r reading குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்வது எப்படி? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்; பயணிகளை பத்திரமாக மீட்டது பேரிடர் மீட்புப் படை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்