மகாராஷ்டிர இழுபறி.. சரத்பவாருடன் சஞ்சய் ராவத் சந்திப்பு

Shivasena Raut meets Sharad Pawar at mumbai

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. எனவே, கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும்.
தேர்தலுக்கு முன்பு தொகுதி பங்கீட்டின் போது, சிவசேனா 50:50 என்ற விகிதத்தில் சீட் கேட்டது. இதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை.

அதன்பிறகு, தங்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் சிவசேனா கேட்டிருக்கிறது. இதற்கு பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது, சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை பிடிவாதமாக கேட்டு வருகிறது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து வருகிறது. இதனால், தேர்தல் முடிவு வெளியாகி 13 நாட்களாகியும் இது வரை மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமையவில்லை.

இந்நிலையில், பாஜக ஆட்சியமைக்கா விட்டால், 2வது பெரிய கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென்று கவர்னரிடம் சிவசேனா கூறியுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்கிறது. இது தொடர்பாக, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சரத்பவாரை சந்தித்து பேசினார். அப்போது பவார் சில நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சரத்பவார் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார்.

இந்த சூழ்நிலையில், சிவசேனாவின் சஞ்சய் ராவத் இன்று மீண்டும் சரத்பவாரை சந்தித்து பேசினார். அப்போது சரத்பவார், ராவத்திடம், முதலில் மத்திய அரசில் இருந்து சிவசேனா விலக வேண்டும். அதன்பின்பே, சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஆதரவு தருவதற்கு முடிவெடுக்க முடியும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, சரத்பவார் முதலமைச்சராக பொறுப்பேற்றால் சிவசேனா ஆதரவு தரத் தயாராக உள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால், மைனாரிட்டி ஆட்சியமைக்க பவார் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

சஞ்சய் ராவத் கூறுகையில், மகாராஷ்டிர அரசியல் இழுபறி குறித்து பவார் கவலை தெரிவித்தார். தங்களை மக்கள் எதிர்க்கட்சியாக தேர்வு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்றார்.

You'r reading மகாராஷ்டிர இழுபறி.. சரத்பவாருடன் சஞ்சய் ராவத் சந்திப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எடியூரப்பா எனக்கு ஆயிரம் கோடி தந்தார்.. எம்.எல்.ஏ. அதிர்ச்சி தகவல்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்