`என்னைப் பார்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா? - ஸ்டாலினை நேரடியாக தாக்கிய கமல்!

kamal slams dmk and stalin

நான் சட்டசபைக்கு சென்றால் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வரமாட்டேன் என ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த பின் கட்சியை வளர்க்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி சேரப்போவதில்லை என அறிவித்துவிட்டு அக்கட்சியை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார். இதனால் சமீபகாமாக இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கூட கமலை விமர்சித்து எழுதியிருந்தார்கள். நிலைமை இப்படி இருக்க இன்று மீண்டும் திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் விமர்சிக்கும் விதமாக ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகளின் அமைப்பான ரோட்ட ராக்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டு பேசினார் கமல். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ``நான் ஒரு வித்தியாசமான விநோதமான அரசியல்வாதி. அரசியலில் எதுவும் சரியில்லை அதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தாலே நீங்களும் அரசியலுக்குள் வந்துவிட்டீர்கள் என்று தான் அர்த்தம். அரசியல் நம் வாழ்க்கையில் ஒரு அங்கம். அதனை யாரும் மறுக்க முடியாது. முதலில் தாமதமாக அரசியலுக்கு வந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது நான் திறந்த புத்தகம். நீங்கள் யார் வேண்டுமானாலும் என்னை படிக்கலாம். அரசியலில் என்னையும், என்னுடைய நேரத்தையும் முதலீடு செய்துள்ளேன். அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லை என்று கூறுவதை ஒருபோதும் ஏற்கமாட்டேன். மாணவர்களுக்கு மட்டுமில்லை அனைவருக்கும் அரசியல் தேவையான ஒன்று. சாதி பெருமை பேசக் கூடாது என எனக்கு வீட்டில் கற்றுக் கொடுத்தார்கள். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். சாதி பெருமை பற்றி பேசாமல் இருந்தாலே கலவரம் குறையும்.

முதலமைச்சர் என்பவர் மக்களுக்காக உழைக்கும் அதிகாரி. ஐந்து வருடத்தில் அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் நிச்சயம் வாக்களியுங்கள். சட்டமன்றத்துக்கு சென்றால் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன். தமிழன் என்பது தகுதி அல்ல. ஒரு விலாசம். தமிழன் என்ற தகுதியை வைத்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகம் இல்லாமல் டெல்லி ஆட்சி அமையாது. டெல்லி இல்லாமல் தமிழகம் ஆட்சி அமைக்க நினைக்க கூடாது.

கூட்டணி என்னும் கருப்புக்குட்டைக்குள் எனது புது காலனியை அழுக்காக்க விரும்பவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழகத்தை பாதிக்கும்" என்றவர் திமுகவின் ஊராட்சி சபை கூட்டங்களை விமர்சிக்க ஆரம்பித்தார். அதில், ``கிராம சபைக் கூட்டம் என்று இருப்பது உங்களுக்கு தெரியாதா?. நேற்று வந்த பையனைப் பார்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா?'’ என்றார். தொடர்ந்து திமுகவை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், ``திமுகவை நான் விமர்சிப்பதற்கு காரணம் அந்தக் கட்சி தான். மறைமுகமாக விமர்சிக்க மாட்டேன். நேரடியாகவே விமர்சிப்பேன். கூட்டணியில் இடம்பெறாததால் தான் விமர்சனம் செய்கிறேன் எனக் கூறுவது தவறு" என்றார்.

 

'திமுகவை கமல் விமர்சித்ததே தெரியாதாம்' - கம்யூனிஸ்ட்களின் கொந்தளிப்பால் 'பேக்' அடித்த கே.எஸ்.அழகிரி!

You'r reading `என்னைப் பார்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா? - ஸ்டாலினை நேரடியாக தாக்கிய கமல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'அதெப்படி எனக்குத் தெரியாம என் தொகுதிக்கு வரலாம்'?இபிஎஸ்,ஓபிஎஸ்சுக்கு எதிராக கலகக் குரல் கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்