`பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டுறீயா? - வறுமையால் வாடும் நாஞ்சில் சம்பத் வருந்தும் ஆர்.ஜே.பாலாஜி!

RJ Balaji speaks about Nanjil Sampath

மதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக, பேச்சாளராக, வைகோவின் உற்ற நண்பனாக அறியப்பட்டவர் நாஞ்சில் சம்பத். வைகோவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் மதிமுகவில் இருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத்துக்கு அ.தி.மு.கவின் பாசறை இன்னோவா துணையோடு வரவேற்று அரவணைத்துக்கொண்டது. எந்த பேச்சால் இந்த உலகத்துக்கு நாஞ்சில் சம்பத் அறியப்பட்டாரோ அதே பேச்சால் இந்த உலகத்தில் கேலி கிண்டலுக்கும் ஆளானார். ஜெயலலிதா சிறை சென்றிருந்த சமயத்தில் அவர் பேசிய பேச்சு கட்சிப் பதவியை பறித்ததுடன் இன்னோவாவையும் பறிக்க வைத்தது. காலப்போக்கில் ஜெயலலிதா மறைந்தபிறகு சசிகலா, தினகரன் பக்கம் இருந்த சம்பத் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். இருப்பினும் வலைதளங்களில், தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் கிரேஸ் கொஞ்சம்கூட குறையவில்லை. தீவிர அரசியலில் இருந்து சம்பத் ஒதுங்கி இருந்தாலும், அவர் குறித்த மீம்ஸ்கள் இன்றளவும் வந்துகொண்டு தான் இருக்கின்றன.

தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் சம்பத். ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள எல்.கே.ஜி திரைப்படத்தில் சம்பத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த மாதம் படம் ரிலீஸாக உள்ளது. இதற்கிடையே படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி நாஞ்சில் சம்பத் குறித்து பேசினார். அதில், ``எப்போதும் நன்றிக்குரிய மனிதர் என்றால் அது சம்பத் சார் தான். அவர் அரசியலில் இருந்து விலகிய சமயம் இந்தப் படத்துல அவர் நடிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. உடனே அவருக்கு போன் பண்ணிட்டு அவர் வீட்டுக்கு போனேன். அவர் கட்சில சேர்ந்தது, இன்னோவா வாங்குனதுலாம் படிச்சதால வீட்டுக்கு போகும்போதே அவர் வசதியா இருப்பார்னு நினச்சேன். ஆனா நினச்சதுக்கு மாறா பட்டினப்பாக்கம் ஹவுசிங்போர்டு வீட்டில் இருந்தாரு. அந்த வீடு வெறும் 600 சதுர அடி இருக்குற ஒரு வீடு.

அந்த வீட்ட பாக்கும்போதே ஒருமாதிரியாக இருந்தது. அவர்கிட்ட கதையை சொல்லி ‘படத்துல எனக்கு அப்பாவா நடிக்கணும் சார்’னு சொன்னேன். ஒரு நிமிஷம் யோசிச்சு சரினு சொன்னவர் என்கிட்டே ஒன்னே ஒன்னு தான் கேட்டார். ``நான் நடிக்கிறேன், என் பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டுறியானு'' என்னப் பார்த்து கேட்டார். 40 வருஷமா அரசியல்ல இருக்கார். இவர்கூட அரசியலுக்கு வந்தவங்க எல்லாம் அவங்க பையங்க படிக்கிறதுக்குனு சொந்தமா காலேஜே கட்டிருக்காங்க. ஆனால் சம்பத் சார் அவரு பையனுக்கு பீஸ் கட்ட முடியாம தவிச்சது பார்க்கும்போது எனக்கு உண்மையாவே வேதனையா இருந்துச்சு. முதல்ல அவருக்கு வில்லத்தனமான வேஷம் தான் பிளான் பண்ணிருந்தோம். ஆனால் அவருகூட பழகி அவர் நல்ல குணம் தெரிஞ்ச பிறகு அவரோட கேரக்டரை மாற்றினோம். அவரோட குணத்தை வைத்தே கதாபாத்திரம் பண்ணினோம். அடுத்து சிவகார்த்திகேயன் படத்துல நடிக்கிறார் சம்பத் சார். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து நிறைய சம்பாதிக்கணும். அது தான் எனக்கு ஆசை" என்றார்.

வார்டு உறுப்பினரே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் போது மூன்று கட்சிகளில் பெரிய ஜாம்பவானாக இருந்தும் நாஞ்சில் சம்பத் இவ்வளவு நேர்மையாக இருப்பது உண்மையிலே வியப்பு தான்.

 

நிலையில்லா மனுஷன் இந்த நாஞ்சில் சம்பத்! கடுமையாகச் சாடிய ஸ்டாலின்

You'r reading `பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டுறீயா? - வறுமையால் வாடும் நாஞ்சில் சம்பத் வருந்தும் ஆர்.ஜே.பாலாஜி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டு ட்வீட்.. கிரண்பேடிக்கு கனிமொழி கடும் கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்