கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் - பேராசிரியை நிர்மலாதேவிக்கு நிபந்தனை ஜாமீன்

HC Madurai branch grants bail to professor Nirmala Devi

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 11 மாதங்களாக சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறையில் உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சிபிசிஐடி விசாரணை நடத்திய இந்த வழக்கில் விசாரணை முடிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

ஜாமீன் கேட்டு நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் பலமுறை மனு செய்தும் ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. உச்ச நீதிமன்றம் சென்று கருப்பசாமி, முருகன் ஆகியோர் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்து விட்டனர். பேராசிரியர் நிர்மலாதேவி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையின் போது நிர்மலாதேவியை ஜாமீனில் விட அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்த பின்னரும் எதிர்ப்பு தெரிவித்தால் தாங்களாகவே முன்வந்து ஜாமீனில் விடுவோம் என்று நீதிபதிகள் அரசுத் தரப்பிடம் கடுமை காட்டியிருந்தனர்.

இதனால் நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து நிர்மலாதேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பாக மீடியாக்களிடம் பேசக்கூடாது, தனிநபர்களை சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் 11 மாத சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் பேராசிரியை நிர்மலாதேவி.

You'r reading கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் - பேராசிரியை நிர்மலாதேவிக்கு நிபந்தனை ஜாமீன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொள்ளாச்சி பாலியல் கொடூரம் வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்