அமமுகவில் நீக்கப்பட்ட கலைராஜன் திமுகவில் ஐக்கியமானார் டி.டி.வி.க்கு முன்கூட்டியே தகவல் கூறிவிட்டாராம்

VP Kalai Rajan who dismissed from Ammk, joins Dmk

டிடிவி தினகரனால் அம முகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். தான் கட்சி மாறப் போவதை முன்கூட்டியே தினகரனிடம் தெரிவித்து விட்டுத்தான் கலைராஜன் திமுகவில் ஐக்கியமானார் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலம் முதலே சசிகலா குடும்பத்தினருக்கு வெகு நெருக்கமாக இருந்தவர் கலைராஜன். இந்த நெருக்கம் காரணமாகவே கலை ராஜனை கட்சியில் ஓரம் கட்டினார் ஜெயலலிதா. 2011-ல் தி.நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த கலைராஜனுக்கு 2016 தேர்தலில் சீட் இல்லை என்று ஜெயலலிதா மறுத்து விட்டார். ஆனாலும் சசிகலா, தினகரனின் விசுவாசியாகவே தொடர்ந்த கலைராஜன் அமமுக கட்சியின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்து வந்தார்.

சமீப காலமாக தினகரனுடன் உரசல் ஏற்பட்டு கட்சிப் பணிகளில் கலைராஜன் சுணக்கம் காட்டி வந்தார். சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுக பக்கம் தாவிய முன்னாள் அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜி இதை மோப்பம் பிடித்து கலைராஜனை திமுகவுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளில் ஜரூர் காட்டியுள்ளார். திமுகவில் சேர கலைராஜனும் சம்மதித்து நேரம் காலமும் குறிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கலைராஜனே தினகரனுக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. நானாக கட்சியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தால் உங்களுக்கு அவமானமாகி விடும். அதனால் என்னை கட்சியிலிருந்து நீக்குங்கள், அதன் பின் திமுகவில் ஐக்கியமாகி விடுகிறேன் என்ற தகவலை தினகரனுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனால் தான் கலைராஜனை கட்சியிலிருந்து கட்டம் கட்டி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன் பின்பே ஏற்கனவே திட்டமிட்டபடி மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று திமுக வில் ஐக்கியமாகியுள்ளார் கலைராஜன். தினகரனுக்கும் தமக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ள கலைராஜன், டிடிவி தினகரன்- அமமுக கட்சியில் இருந்து இன்னும் பலர் திமுக கட்சியில் இணையவுள்ளனர் என்று ஒரு வெடியையும் கொளுத்திப் போட்டுள்ளார்.

You'r reading அமமுகவில் நீக்கப்பட்ட கலைராஜன் திமுகவில் ஐக்கியமானார் டி.டி.வி.க்கு முன்கூட்டியே தகவல் கூறிவிட்டாராம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈபிஎஸ்–ஓபிஎஸ் ஆட்சிக்கு நெருங்குமா ஆபத்து –கனகராஜ் மரணம் எதிரொலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்