2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமா... உதயநிதியின் விறுவிறு பிரச்சாரத்தின் பின்னணிக்கு காரணம்

Rehearsal for 2021 election, Reasons behind udhaya Nithin Stalins election tour

தேர்தல் அரசியலில் முதன்முறையாக களம் இறங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின் .தற்போது மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காகப் பிரச்சாரத்தில் குதித்துள்ள உதயநிதி ஸ்டாலின், 2021-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக போட்டியிட முன்னோட்டமாக தற்போதைய தேர்தலில் முழு வீச்சில் பிரச்சாரத்தில் குதித்துள்ளார் என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.

திமுக கட்சியில் கருணாநிதி' தலைவராக இருந்த காலத்தில் அவருடைய அரசியல் வாரிசாக மு.க.ஸ்டாலின் வளர்ந்தார். இப்போது ஸ்டாலினின் வாரிசான உதயநிதிக்கும் அடுத்த அரசியல் வாரிசு ஆசை வந்து விட்டதாகவே தெரிகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றுக்கான பிரச்சாரங்களில் உதயநிதி ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை. திருவெறும்பூர் தொகுதி நின்ற தனது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்காக மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இம்முறையோ திமுக போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்து விட்டார். கடந்த 21-ந் தேதி வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் உதயநிதி. தொடர்ந்து உதயநிதியின் தேர்தல் பயணம் பிரச்சாரத்தின் கடைசி நாளான ஏப்ரல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில், மிஷ்கின் இயக்கி வரும் 'சைக்கோ' படத்துக்காக கடலூரில் நடைபெறவுள்ள இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 2 நாட்கள் கலந்து கொள்ளவுள்ளார். அதுவும் காலையில் பிரச்சாரம், இரவில் படப்பிடிப்பு என உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்

2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக உதயநிதி ஸ்டாலின் களம் காணவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் முன்னோட்டமாக தற்போது தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். மேலும், உதயநிதியின் இந்தப் பயணத்துக்கு தனியாக பிரச்சார வாகனம், பேச்சுகளுக்காகக் குறிப்புகள் கொடுப்பது என அரசியல் அனுபவம் வாய்ந்த மேதாவிகள் பலர் துணைக்கு இறக்கி விடப்பட்டுள்ளனராம்.

இந்தப் பிரச்சாரப் பயணத்தில் தன் மீது விழவுள்ள வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முழுமையாகப் போக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளாராம் உதயநிதி. தேர்தலுக்குப் பிறகும் கூட நடைபெறவுள்ள முக்கியமான திமுக பொதுக்கூட்டங்களில் உதயநிதி இடம்பெற உள்ளார்.

தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதால், இனி நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கும் வந்துள்ளார் உதயநிதி. இனி, தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் நல்ல படங்களை வெளியிடுவதில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளார்.

தற்போது உதயநிதி இறங்கியுள்ள வேகத்துக்கு, அடுத்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அவருடைய நேரடி அரசியல் பயணத்திற்கு முன்னோட்டம் தான் என்கின்றனர் உதயநிதியின் அபிமானிகள்.

You'r reading 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமா... உதயநிதியின் விறுவிறு பிரச்சாரத்தின் பின்னணிக்கு காரணம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 12-வது ஐபிஎல் இன்று தொடக்கம் : முதல் போட்டியில் தோனி - கோஹ்லி படை மோதல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்