ஆரம்பித்த இடத்திற்கே மீண்டு வந்த நாஞ்சில் சம்பத்... திமுகவுக்காக 26-ல் புறப்படுகிறது பிரச்சார பீரங்கி

nanjil Sampath came back to Dmk ready to election campaign

ஆரம்ப காலத்தில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத் மதிமுக, அதிமுக, அமமுக என ரவுண்டு அடித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் குரல் கொடுக்க 26-ந் தேதி முதல் புயல் வேகப் பயணத்திற்கு தயாராகி விட்டார்.

முதன் முதலில் திமுகவில் அடியெடுத்து வைத்த நாஞ்சில் சம்பத், மேடைகளில் தமிழ்ச் சொல் விளையாட்டால் விறுவிறுவென பிரபலமானார். சினிமாப் படம் பார்க்கச் செல்வது போல் நாஞ்சில் சம்பத்தின் மேடைப் பேச்சைக் கேட்கவும், அவர் நாவில் தமிழ்ச் சொற்கள் விளையாடுவதை ரசிக்கவும் கூ ட்டம் திரண்டு விடும். திமுகவில் வைகோ இருந்த காலத்தில் அவருக்கு அடுத்தபடியாக சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார்,

வைகோ திமுகவில் இருந்து பிரிந்த போது அவருடனே சென்றார் நாஞ்சில் சம்பத். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து பிரச்சார பீரங்கியாக இடிமுழங்கினார். ஆனால் வைகோ உடன் மனக்கசப்பு ஏற்பட்டு ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார் ஒன்றையும் வழங்கி அவரை மகிழ்வித்தார் ஜெயலலிதா. இதனால் முதலில் மதிமுக மேடைகளில் எந்தளவுக்கு ஜெயலலிதாவை மோசமாக விமர்சித்தாரோ, அதை விட இரண்டு மடங்கு அளவுக்கு அதிமுக மேடையேறி ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளினார் நாஞ்சில் .

ஜெயலலிதா மரணத்திற்குப் பின் இன்னோவா காரை அதிமுக அலுவலகத்தில் நிறுத்திவிட்டு டிடிவி தினகரன் பக்கம் சில காலம் ஒதுங்கினார். அங்கும் தினகரனின் கட்சிப் பெயரில் என்ற சொல்லே இல்லை என்று குற்றம் சாட்டி வெளியேறினார்.


இனிமேல் இலக்கிய மேடைகளில் மட்டுமே முழங்குவேன். அரசியல் பேசினால் நாக்கை அறுத்துக் கொள்வேன் என்றெல்லாம் சபதம் எடுத்து சிறிது காலம் அமைதி காத்த நாஞ்சில் சம்பத், சபதத்தை கைவிட்டு மீண்டும் அரசியல் பயணத்தை திமுகவிலிருந்து தொடங்க முடிவெடுத்து விட்டார்.

இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  சந்தித்த நாஞ்சில் சம்பத், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 26-ந்தேதி முதல் பிரச்சாரப் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்

You'r reading ஆரம்பித்த இடத்திற்கே மீண்டு வந்த நாஞ்சில் சம்பத்... திமுகவுக்காக 26-ல் புறப்படுகிறது பிரச்சார பீரங்கி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்துமத சிறுமிகள் மதமாற்றமா–சூடுபிடிக்கும் பாகிஸ்தான் விவகாரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்