மோடிக்கு எதிராக 111 என உதார் விட்ட அய்யாக்கண்ணு ...பதறிப்போய் சமரசம் பேசும் பாஜக தரப்பு

Election 2019, bjp shocks over Ayyakkannu announced to tn formers contest against pm modi

பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் தமிழக விவசாயிகள்111 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போவதாக ஒரே ஒரு அறிவிப்பு செய்தார் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. இந்த அறிவிப்பு வெளியானது முதலே அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக தரப்பு படுதீவிரமாகி ஐயா வேண்டாம்... என்று கெஞ்சும் நிலைக்கு சென்றுள்ளனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு. விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக இவர் நடத்தாத நூதனப் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. காவிரி பிரச்னை முதல் விவசாயிகளின் கடன் தொல்லை பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தினார்.

தமிழக விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க பிரதமர் மோடி எங்களை அழைத்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி வீதிகளில் அய்யாக்கண்ணு நடத்தாத நூதனப் போராட்டம் ஒன்று கூடப் பாக்கியில்லை என்றே கூறலாம். கோவணத்துடன் பல நாட்கள் போராடிய இவர்களை இறுதி வரை மத்திய அரசும், பிரதமர் மோடியும் கண்டு கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் முழு நிர்வாணமாக பாராளுமன்றம் நோக்கி சாலையில் ஓடி பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனாலும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. கடைசி வரை தமிழக விவசாயிகள் கண்டு கொள்ளப்படவுமில்லை.

இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு அய்யாக்கண்ணு ஒரே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் தமிழக விவசாயிகள் 111 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்யப் போகிறோம் என்பது தான் அந்த அறிவிப்பு. 111 பேர் போட்டியிட்டால் என்ன ஆகும். தற்போது தேர்தல் ஆணையத்தில் உள்ள வசதிப்படி 64 பேர் வரை போட்டியிட்டால் மட்டுமே எந்திர ஓட்டுப்பதிவு நடத்த முடியும். அதற்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்குச் சீட்டு முறையில் தான் நடத்த முடியும். நூற்றுக்கணக்கானோர் போட்டியிட்டால் வாக்குச் சீட்டே ஒரு புத்தகம் சைஸ் ஆகிவிடும். வாக்காளர்களும் குழம்பிப் போவார்கள்.

இதையெல்லாம் எண்ணிப் பார்த்த பாஜக தரப்பு, அய்யாக்கண்ணு அறிவிப்பால் பதறிப் போய், அய்யா அப்படியெல்லாம் வேண்டாம்... உங்க கோரிக்கைய சொல்லுங்க... நாங்க கட்டாயம் நிறைவேற்றுகிறோம்.. என்று தூது மேல் தூது விட்டு கெஞ்ச, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாகவே அய்யாக்கண்ணுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் டெல்லியில் இருந்தும் உளவுத்துறை முதல் பல்வேறு துறை அதிகாரிகள் அய்யாக்கண்ணுவை தொடர்பு கொண்டு, உங்க பிரச்னை, கோரிக்கை என்ன? என்று கேட்டு வருவதாகவும், தாமும் விவசாயிகள் பிரச்னை எப்படியாவது தீர்ந்தால் சரி என்று பதிலளித்து வருவதாகவும் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

You'r reading மோடிக்கு எதிராக 111 என உதார் விட்ட அய்யாக்கண்ணு ...பதறிப்போய் சமரசம் பேசும் பாஜக தரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவு ....

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்