தென் மாவட்டங்களில் ஒரே ஒரு தொகுதியில் திமுக-அதிமுக நேரடி மோதல் - சரிசமமாக மல்லுக்கட்டும் அமமுக

Election 2019, tirunelveli only, direct contest between admk and Dmk in south districts

தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. அம முகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

இந்தப் பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திமுகவும்,அதிமுகவும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எஞ்சிய 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டன. இதனால் திமுகவும் அதிமுகவும் நேரடி மோதல் என்று பார்த்தால் மொத்தம் 8 தொகுதிகளில் மட்டும் தான். அதிலும் தென் மாவட்டங்களில் திருநெல்வேலி தொகுதியில் மட்டுமே இரு கட்சிகளும் நேரடி மோதுகின்றன.

மற்ற தொகுதிகளான குமரியில் பாஜகவும் காங்கிரசும் நேரடியாக போட்டியிடுகின்றன. தூத்துக்குடியில் திமுகவுடன் பாஜகவும், தென்காசியில் திமுகவுடன் புதிய தமிழகமும் பலப்பரீட்சை நடத்துகின்றன. விருது நகரிலோ காங்கிரஸ், தேமுதிக இடையே தான் நேரடி மோதல். சிவகங்கையில் பாஜக காங்கிரஸ் களம் காண்கின்றன.

ராமநாதபுரத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் பாஜக மல்லுக்கட்டத் தயாராகியுள்ளது. தேனியில் காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையே போட்டி என்றால் திண்டுக்கல்லில் பாமகவுடன் திமுக மோதுகின்றது. மதுரையிலோ அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கட்சி பலப்பரீட்சை நடத்துகிறது.

இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் விதவிதமாக கட்சிகள் மோத, எல்லாத் தொகுதிகளிலுமே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்து களம் காண்கிறது. இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல் போன்ற தொகுதிகளில் பலம் வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்தி திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு பெரும் சவால் விட்டுள்ளார் தினகரன். இந்தத் தொகுதிகளில் மும்முனைப் போட்டி என்ற அளவுக்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சில தொகுதிகளில் வெற்றியை டிடிவி தினகரன் அறுவடை செய்தாலும் ஆச்சர்யமில்லை என்ற பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது.

You'r reading தென் மாவட்டங்களில் ஒரே ஒரு தொகுதியில் திமுக-அதிமுக நேரடி மோதல் - சரிசமமாக மல்லுக்கட்டும் அமமுக Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பட்டு போன்ற மென்மையான சருமத்திற்கு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்