தெலுங்கானா முதல்வர் மகளை எதிர்த்து 178 விவசாயிகள் போட்டி - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்

Election 2019, 178 candidates contesting in Nizamabad Loksabha of Telangana

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவை எதிர்த்து 178 விவசாயிகள் ஒட்டு மொத்தமாக களமிறங்கியுள்ளதால் மொத்தம் 185 வேட்பாளர்கள் அத் தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள M - 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தலாமா? அல்லது வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதா? என்ற குழப்பத்தில் உள்ளது தேர்தல் ஆணையம் .

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 17 மக்களைவைத் தொகுதிகளில் முதல் கட்டமாக நடைபெறும் தேர்தலில் ஏப்ரல் 11-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அங்குள்ள நிஜாமாபாத் தொகுதியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மஞ்சள் விவசாயிகளுக்கு அம்மாநில அரசு உதவவில்லை என்ற கோபத்தில் எதிர்ப்பைக் காட்ட முதல்வரின் மகளுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர் . வேட்பு மனுக்கள் பரிசீலனை, வாபஸ் முடிந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில் 185 பேர் களத்தில் உள்ளதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் மட்டும் 178 பேர் ஆவர்.

இந்நிலையில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால், நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதா? அல்லது புதிதாக M - 3 மின்னணு எந்திரத்தை அறிமுகப்படுத்தலாமா? என்ற குழப்பத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது.

தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகபட்சம் 64 பேர் வரை போட்டியிட்டால் மட்டுமே பயன்படுத்த முடியும். புதிதாக M - 3 மின்னணு முறையில் 384 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வாக்களிக்க முடியும். இதனால் M - 3 மின்னணு வாக்குப்பதிவு முறையை முதன் முறையாக அறிமுகம் செய்யலாமா? என்பது பற்றியும் தேர்தல் ஆணையம் யோசித்து வருகிறது.

You'r reading தெலுங்கானா முதல்வர் மகளை எதிர்த்து 178 விவசாயிகள் போட்டி - குழப்பத்தில் தேர்தல் ஆணையம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை – உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்