பள்ளிவாசலில் ஓட்டுக் கேட்க எதிர்ப்பு - மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு விரட்டியடிப்பு

Election 2019, Muslims protest against admk minister sellur Raju to campaign in the mosque in Madurai

மதுரையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முஸ்லீம் பள்ளிவாசலில் அமைச்சர் செல்லூர் ராஜு ஓட்டுக் கேட்கச் சென்றார். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்க வராதீர்கள் என்று கடும் வாக்குவாதம் செய்து அமைச்சரையும் உடன் வந்தவர்களையும் பள்ளிவாசல் உள்ளே நுழைய விடாமல் துரத்திய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

 

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பாவின் மகனுமான ராஜ் சத்தியன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் எழுத்தாளர் வெங்கடேசனும், அமமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாத்துரையும் போட்டியிடுகின்றனர். மதுரை தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் அனல் பறக்கும் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது.

அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியனுக்கு ஆதரவாக அமைச்சர் செல்லூர் ராஜு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.மதுரை கோ. புதூரில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் வேட்பாளர் ராஜ் சத்யன், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜு ஓட்டுக் கேட்டுச் சென்றார். ஆனால் பள்ளி வாசல் முன் திரண்ட இஸ்லாமியர்கள், பாஜகவினரோடு சேர்ந்து ஓட்டுக் கேட்டு வராதீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் தரப்பிலோ, நாங்கள் இரட்டை இலைக்குத் தான் ஓட்டுக் கேட்டு வந்துள்ளோம் என்று எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தனர். நீங்கள் பாஜகவுன் தானே கூட்டணி வைத்துள்ளீர்கள்? என்று கூறி அமைச்சரையும் உடன் வந்தவர்களையும் முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். அமைச்சர் செல்லூர் ராஜூ எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் கடைசி வரை பள்ளிவாசலுக்குள் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

You'r reading பள்ளிவாசலில் ஓட்டுக் கேட்க எதிர்ப்பு - மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு விரட்டியடிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இறுதி வேட்பாளர் பட்டியல்; மக்களவை தொகுதிகளில் 845, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 269 பேர் போட்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்