வயநாடு தொகுதியிலும் பெயர்க் குழப்பம் - ராகுல் காந்தி பெயரில் 3 பேர் போட்டி

Loksabha election, Rahul Gandhis contesting in Wayanad Loksabha

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்து, மேலும் 2 சுயேட்சைகள் ராகுல் காந்தி பெயரில் மனுத்தாக்கல் செய்து பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

உ.பி யின் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இம்முறை தென் மாநில மக்களுக்கு காங்கிரஸ் உள்ளது என்பதை நீரூபிக்கும் வகையில் கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். வரும் 23-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி நேற்று முன்தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்த அடுத்த சில நிமிடங்களில் கே.இ. ராகுல் காந்தி, கே.ராகுல் காந்தி என்ற பெயர்களில் சுயேட்சைகள் இருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து வயநாடு தொகுதியிலும் பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ராகுல் காந்தி களுமே பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்திரா காந்தி குடும்பத்தின் மீதான பற்றில், அவர்களுடைய பெற்றோர் இவர்களுக்கு ராகுல் காந்தி பெயரைச் சூட்டினராம். இப்போதோ விளம்பரத்திற்காகவும், பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்தவும் ஒரிஜினல் ராகுல் காந்திக்கு எதிராக சுயேட்சையாக மனுத் தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

33 வயதான கே.இ.ராகுல் காந்தி என்பவர் கோட்டயம் மாவட்டம் எருமேலியைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடல் கலைஞர் ஆவார். கார் டிரைவரான இவருடைய தந்தை குஞ்சுமோன் தீவிர காங்கிரஸ்.பற்றாளர் .இந்திரா காந்தி குடும்பத்தின் மீதான விசுவாசத்தில் இவருக்கு ராகுல் காந்தி பெயர் வைத்ததுடன் மற்றொரு மகனுக்கு ராஜீவ் காந்தி பெயரை சூட்டியுள்ளார். கே.இ. ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தது குறித்து விசாரிக்கலாம் என்று பத்திரிகையாளர்கள்போன் செய்தால் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். அவருடைய சகோதரர் ராஜீவ் காந்தியோ எதுவுமே தெரியாது என்கிறாராம்.

மற்றொரு கே.ராகுல் காந்தி என்பவர் தமிழகத்தின் கோவையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை கிருஷ்ணன் என்பவரும் முன்பு காங்கிரசில் தீவிரப்பற்றாளராக இருந்து தற்போது அதிமுக விசுவாசியாக உள்ளாராம். அகில இந்திய மக்கள் கழகம் என்ற கட்சி சார்பில் சுயேட்சையாக வயநாடு தொகுதியில் போட்டியிடும் கே.ராகுல் காந்தி, ஏற்கனவே கடந்த 2016-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை சிங்காநல்லூரிலும், 2014-ல் கோவை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலிலும் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர். தன் தந்தை தனக்குச் சூட்டிய பெயர் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையே எதிர்க்க உதவியுள்ளது என்று பெருமையாகவும் கூறியுள்ளார்.

போதாக்குறைக்கு சிவபிரசாத் காந்தி என்ற பெயருடைய திருச்சூரைச் சேர்ந்த சமஸ்கிருத ஆசிரியர் ஒருவரும் வயநாடு தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்தியன் காந்தியன் பார்ட்டி என்ற அமைப்பு சார்பில் இவர் போட்டியிடுகிறார். வெற்று விளம்பரத்திற்காகவும், பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்தவும் இது போன்று ஒரே பெயரிலான வேட்பாளர்களை நிறுத்துவது சமீப காலமாகவே அதிகரித்துள்ளது.

You'r reading வயநாடு தொகுதியிலும் பெயர்க் குழப்பம் - ராகுல் காந்தி பெயரில் 3 பேர் போட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோவையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்.. 9வயது சிறுமியை 3 மாணவர்கள் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்