வேலூர் தொகுதி திக்.. திக்..! தேர்தல் நடக்குமா ? ரத்தாகுமா? - இன்று முடிவெடுக்கிறது தேர்தல் ஆணையம்

IT raid issue, EC takes final decision today on conducting Election in Vellore Loksabha

வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா? ரத்தாகுமா? என்ற திக்.. திக்.. பதற்றத்திலேயே நாட்கள் கடந்து போகும் நிலையில் இன்று உறுதியான முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் மக்களவைத் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான மறுநாள் முதலே பதற்றம் தொற்றிக் கொண்டு விட்டது. கதிர் ஆனந்துக்கும், துரைமுருகனுக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் கடந்த 30-ந் தேதி நள்ளிரவு வருமானத்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். துரைமுருகன் வீடு, பள்ளி, கல்லூரியில் நடத்தப்பட்ட 20 மணி நேர சோதனையில் ரூ 10 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. கதிர் ஆனந்தின் வெற்றியைத் தடுக்க வருமான வரி சோதனை என்ற பெயரில் சதி செய்கிறார்கள் என்றெல்லாம் கூறி கிண்டலும் செய்தார் துரைமுருகன்.

ஆனால் அதற்கடுத்த இரு நாட்களிலேயே துரைமுருகன் நண்பர்களை பொறி வைத்து சோதனை நடத்தி, பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் கட்டுக்கட்டாக ரூ.10.57 கோடியை கைப்பற்றி திகிலை கிளப்பி ஆட்டம் காட்டி விட்டது வருமான வரித்துறை .இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகப் போகிறது என்ற பேச்சு கடந்த 10 நாட்களாகவே உலா வர, தொகுதியில் ஒரு வித பீதியுடனே பிரச்சாரமும் மந்த நிலைக்கு சென்று விட்டது. மேலும் கைப் பற்றப்பட்ட ரூ 10.57 கோடியும் காட்பாடியில் உள்ள கனரா வங்கி கிளையில், கதிர் ஆனந்த் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்து, கனரா வங்கி கிளை மேலாளர் தயாநிதி என்பவரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்து கிடுக்கிப்பிடி போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் வருமான வரிச் சோதனை அறிக்கை, ., வேலூர் தொகுதி தேர்தல் அலுவலரின் அறிக்கை, காட்பாடி போலீசில், கதிர் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு என அனைத்தையும் தொகுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைத்துள்ளார். தமிழக தேர்தல் அதிகாரியின் இந்த அறிக்கையை பரிசீலித்து வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதா? ரத்து செய்வதா? என்பதை தலைமை தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முடிவை எதிர் பார்த்து வேலூர் தொகுதி வேட்பாளர்களும், வாக்காளர்களும் திக்.. திக்.. மனநிலையில் உள்ளனர்.

You'r reading வேலூர் தொகுதி திக்.. திக்..! தேர்தல் நடக்குமா ? ரத்தாகுமா? - இன்று முடிவெடுக்கிறது தேர்தல் ஆணையம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏ.ஆர்.முருகதாஸ் கதைக்கு ஓகே சொன்ன த்ரிஷா.. காரணம் என்ன தெரியுமா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்