பைனான்சியரிடம் 18 கோடி பறிமுதல்! அமைச்சர், ஐ.பி.எஸ்.களுக்கு சிக்கல்?

income tax officials raided in financier offices who is very close contacts with tamilnadu politicians and i.p.s. officers

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் நான்கைந்து நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் தீவிரமாக களமிறங்கி அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால், எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து வருமான வரிச் சோதனைகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஆளும்கட்சிப் பிரமுகர்கள் மீதும் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் வருமானவரித் துறையினரின் பார்வை விழுந்துள்ளது.

தமிழக பொதுப்பணித்துறையில் பெரிய கட்டுமானப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்யும் பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தில் கணக்கில் வராத பணம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவுக்கு புகார்கள் வந்திருக்கிறது.

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம்தான், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கம், அரசு மருத்துவ கல்லூரிகள், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு போன்ற பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டது.

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல்லில் 4 இடங்களிலும், சென்னையில், எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், பி.எஸ்.கே. நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமாரின் இல்லம் உள்பட 3 இடங்களிலும் சோதனை நடந்தது.

இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.13.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அமைச்சர் ஒருவர் உள்பட முக்கிய அரசியல்புள்ளிகளுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதே போல், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பைனான்சியர்களிடம் பணம் திரட்டி பின்னாளில் கருப்பு பணத்தின் மூலம் கடனை அடைக்க சில முக்கியப் புள்ளிகள் திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் சென்னையில் பைனான்சியர்கள் ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டி ஆகியோருக்கு தொடர்புடைய 10 இடங்களிலும், நெல்லையில் ஒரு இடத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சுஜய் ரெட்டிக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுஜய் ரெட்டி மலேசிய கம்பெனியில் ரூ.16 கோடி முதலீடு செய்துள்ள ஆவணங்களும் சிக்கியுள்ளது. இந்த சுஜய் ரெட்டி தமிழகத்தில் உள்ள சில மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கமானவராம். அந்த போலீஸ் அதிகாரிகளே இவரிடம் இருந்து அரசியல் புள்ளிகளுக்கு பெரும் பணத்தை திரட்ட முயன்றுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, அந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதும் வருமானவரி புலனாய்வுத் துறையின் பார்வை திரும்பியுள்ளது. அதனால், முக்கியஅரசியல் புள்ளிகளுடன் அவர்களுக்கும் சிக்கல்தான் என்கின்றனர்.

You'r reading பைனான்சியரிடம் 18 கோடி பறிமுதல்! அமைச்சர், ஐ.பி.எஸ்.களுக்கு சிக்கல்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓட்டுக்கு முன்னூறு ரூபாயாம்? அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க. மும்முரம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்