வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு

Loksabha election, election in Vellore countermanded

வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய தேர்தல் வரலாற்றில் பட்டுவாடா புகாரின் பேரில் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.


வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். இந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதால் இங்கு தேர்தல் களம் ஆரம்பத்திலேயே சூடு பிடித்தது.ஆனால் பிரச்சாரம் தொடங்கிய சில நாட்களிலேயே கடந்த மார்ச் 30-ந் தேதி மற்றும் ஏப்ரல் 1-ந் தேதிகளில் காட்பாடியில் துரைமுருகன் வீடு, அவருடைய மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரியிலும், திமுக பிரமுகர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடியில் நடந்த ரெய்டில் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பிடிபட்ட நிலையில், அந்தப் பணம் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பட்டு வாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டுருந்ததாக தகவல்கள் வெளியாகி, வேலூர் தொகுதியில் எந்த நேரமும் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகி, அங்கு பிரச்சாரமும் கடந்த 15 நாட்களாக களையிழந்து காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்பாடி போலீசில் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது, தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் வருமான வரித்துறைத் துறையினர் கொடுத்த அறிக்கைகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார்.


இந்த அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆனையம், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய முடிவு செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புத லுக்காக பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து வேலூர் தொகுதியில் 18-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் பணப்பட்டுவாடா புகாரால் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே இதே போன்ற புகாரில் நாட்டிலேயே முதல்முறையாக அரவாக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மக்களவைத் தேர்தலிலும் இந்த மோசமான சாதனையை தமிழகம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எட்டுவழிச்சாலை சிக்கல் – தருமபுரிக்குள் முடங்கிய பாமகவினர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்