ஆண்டிபட்டியில் அமமுகவினரை அலறவிட்ட அதிகாரிகள் - ரூ.1.5 கோடி பறிமுதல் போலீஸ் துப்பாக்கி சூடு - 150 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

IT officials raid in Andipatti Ammk office and seized rs 1.5 crore money

ஆண்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரை குறிவைத்து வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனைக்கு அமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆண்டிபட்டியில் இரவு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் அமமுகவினர் 150 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப் பட்டதால் அக்கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மக்களவைத் தொகுதியுடன் ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 தொகுதிகளிலும் அதிமுக, திமுக கூட்டணிகளுடன் தினகரனின் அமமுகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அவரை எப்படியும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் அதிமுக, இரு தினங்களுக்கு முன்பே தொகுதி முழுவதும் ஒரே இரவில் ஓட்டுக்கு ரூ 1000 வீதம் பட்டுவாடாவை கச்சிதமாக முடித்து விட்டனர்.

இந்நிலையில் அமமுகவினர் ஆண்டிபட்டியில் நேற்று இரவு பட்டுவாடா செய்ய பணத்தை கட்சி அலுவலகத்தில் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து போலீசாருடன் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிடச் சென்றனர்.

ஆனால் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்த அமமுகவினர், அதிகாரிகளை அலுவலகத்தில் நுழைய விடாமல் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் திடீரென வானத்தை நோக்கி 5 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அமமுக மாவட்ட துணைச் செயலாளர் பழனி உட்பட 4 பேரை கைது செய்து மற்றவர்களை விரட்டியடித்து விட்டு அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

இரவு முதல் இன்று காலை வரை நீடித்த சோதனையில் ரூ.1.48 கோடி பணம் பிடிபட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அம முகவினர் 150 பேர் மீது கொலை முயற்சி, பணம் கடத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதால் அமமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு

You'r reading ஆண்டிபட்டியில் அமமுகவினரை அலறவிட்ட அதிகாரிகள் - ரூ.1.5 கோடி பறிமுதல் போலீஸ் துப்பாக்கி சூடு - 150 பேர் மீது கொலை முயற்சி வழக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திரிணாமுல் கட்சிக்கு பிரச்சாரம் துரத்தப்பட்ட வங்கதேச நடிகர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்