வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லுமா ..? ஏ.சி.சண்முகத்தின் மனு மீது காரசார வாதம் - மாலையில் தீர்ப்பு

Chennai high court adjourned judgement on A.C. Shanmugam petition seeking stay against Vellore election countermanded

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஏ.சி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் காரசார வாதம் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு மாலை 4.30 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் தரப்பில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததாக காரணம் காட்டி, அத் தொகுதியில் கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்து விட்டது தேர்தல் ஆணையம் . ரத்து செய்வதற்கு முன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வேலூர் தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், உடனே தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்கக் கோரி மனு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது ஏ.சி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளர் மீதோ, அவர் சார்ந்த கட்சி மீதோ தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலையே ரத்து செய்யும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டப்படி குடியரசுத் தலைவருக்கு கிடையாது. தேர்தலை ரத்து செய்வதால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், அப்படியெனில் பணம் பட்டுவாடா செய்த வேட்பாளர் தேர்தலில் நிற்கலாம் என்கிறீர்களா? என கேட்டனர். சம்பந்தப்பட்ட வேட்பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஏ.சி.சண்முகம் தரப்பில் கூற, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரைத் தான் தகுதி நீக்கம் செய்ய முடியும். வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பணப்பட்டுவாடா நடப்பதற்கான ஆதாரங்களுடன் வருமான வரித்துறை கொடுத்த அறிக்கைப்படியும், தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பிலும் நியாயப் படுத்தப்பட்டது. சுயேட்சை வேட்பாளர் முருகுமாறன் என்பவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், சம்பந்தப்பட்ட வேட்பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதனால் இந்த வழக்கில் 2 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. பின்னர், இந்த வழக்கில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர். இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது செல்லுமா? செல்லாதா? என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சபேசன் வீட்டில் என்ன எடுத்தீர்கள்? ஐ.டி.க்கு ஸ்டாலின் கேள்வி

You'r reading வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லுமா ..? ஏ.சி.சண்முகத்தின் மனு மீது காரசார வாதம் - மாலையில் தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜனநாயகப் படுகொலை..ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகின்றனர்! –பாஜக, அதிமுகவை விளாசும் தொல்.திருமாவளவன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்